வன்னியர்களுக்கு 10.5 சதவீதம்உள் இடஒதுக்கீடு வழங்கல் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

By செய்திப்பிரிவு

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்டகாலமாகப் போராடி வருகிறார். முதல்வர் பழனிசாமியை சந்தித்தும் பாமக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பிறகும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் பாமக சார்பில் அண்மையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதையடுத்து தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்த ஆணையமும் 2 முறை கூடி ஆலோசனை நடத்தியது. இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வரும் அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதவை அறிமுகம் செய்தார். அதன் நோக்ககாரண விளக்கவுரையில் கூறியிருப்பதாவது:

கடந்த 1985-ம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜே.ஏ.அம்பாசங்கர் தலைமையிலான தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆணையம், தமிழத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களின் மக்கள் தொகையை மதிப்பிட்டுள்ளது. மாநிலத்தில் அப்போதிருந்த அனைத்து சாதிகள் மற்றும் சமூகங்களின் பின்தங்கிய நிலையைக் கண்டறிவதற்காக மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தியது.

30 மற்றும் 20 சதவீதம்

1993-ம் ஆண்டு தமிழக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (கல்வி நிலையங்களில் இடங்கள் மற்றும் அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல்) சட்டத்தின் கீழ் தனியார் கல்வி நிலையங்களை உள்ளடக்கிய கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையிலும் அரசின் கீழ் வரும் பணிகளில் பதவிகள் அல்லது நியமனங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் ஆகிய சமூகங்களுக்கு 30 சதவீதம், 20 சதவீதம் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் ஆகிய பிரிவினர் பிற சமூகத்தினருடன் போட்டியிட்டு, அவர்களுக்கு உரிய ஒதுக்கீட்டின் பலன்களின் சட்டப்படியான பங்கினைப் பெற இயலவில்லை. மேலும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு பணி நியமனங்கள் அல்லது பதவி உயர்வுகளில் தனிப்பட்ட ஒதுக்கீடை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த வன்னியகுல சத்ரியர்களுக்கு வழங்க வேண்டும் என அவர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன.

பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்குள் உள்ள பல்வேறுபிரிவினர்களுக்காக உள் ஒதுக்கீடு வழங்கவைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்தார். தமிழகத்துக்குள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினரின் சமமான வளர்ச்சியை முன்னேற்றுவதற்காகவும் பல்வேறு நலன்களுக்கு சிறந்த வாய்ப்பினை வழங்குவதற்காகவும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும் சீர்மரபினருக்கு 7 சதவீதமும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 2.5 சதவீதம் ஆகிய 3 பிரிவுகளுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு பிற்படுத்தப்பட்டோர் நலஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளது.

குரல் வாக்கெடுப்பு

இந்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவும் அதற்கிணங்க இடஒதுக்கீடு கொள்கையை நிறைவேற்றவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் பேரவையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஆய்வு செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இந்த சட்ட மசோதா குறித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

2012-ம் ஆண்டு ஜனார்த்தனம் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அத்துடன் இந்த ஒதுக்கீடானது தற்காலிகமாக வழங்கப்படுகிறது. இன்னும் 6 மாத காலத்தில் சாதிவாரியாக கணக்கெடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான ஆணையம் அமைக்கப்பட்டு அப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

அது ஒவ்வொரு சாதிக்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் வரும்போது அது மாற்றியமைக்கப்படும். இடஒதுக்கீட்டுக்காக வன்னியர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ராமதாஸும் மற்றும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து தங்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இன்று சட்ட மசோதா கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்