கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்துபெறப்பட்ட நகைக் கடன்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அவர் நேற்று வெளியிட்ட 2 அறிவிப்புகளின் விவரம் வருமாறு:
கரோனா பெருந்தொற்று, நிவர், புரெவி புயல்கள் ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த கடும் மழை ஆகியவை பாதிப்பை ஏற்படுத்தின. இதனால், கடன் பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பெரும் அல்லலுக்கு உள்ளாகினர்.
இப்பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காக்க ரூ. 2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு, பயிர்க்கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடி தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களை வழங்கி பொருளாதார தாக்கத்திலிருந்து படிப்படியாக மக்களை அரசு மீட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா காலத்தில் ஏற்பட்ட குடும்ப நிதி நெருக்கடியை சமாளிக்க ஏழை, எளிய மக்கள், விவசாய தொழிலாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களில் தாங்கள் பெற்றநகைக்கடனை திரும்ப செலுத்துவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சிரமத்தில் இருந்து மக்களை மீட்டெடுக்க கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகுவைத்து பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
மகளிர் குழுக்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகளிர் சுயஉதவிக் குழுக்களை அமைத்து, அவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு மகத்தான வழியை வகுத்துத் தந்தார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழுக்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் உள்ளவர்கள் பெரும்பாலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.கரோனா தொற்று காலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், சுய உதவி குழுக்கள் தாங்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெற்ற கடனை திரும்ப செலுத்த இயலாத நிலை உள்ளதாகவும் அவர்களின் துயரை துடைக்க கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.
இவற்றை கருத்தில் கொண்டு, சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏழை, எளிய பெண்களின் துயர் துடைக்க, அவர்கள் கூட்டுறவு வங்கிகளிலும் கூட்டுறவு சங்கங்களிலும் பெற்று நிலுவையில் உள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago