தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தை கோவையில் நேற்று தொடங்கினார். தங்களது சட்டைப் பையை நிறைக்கவே திமுக, காங்கிரஸ் கூட்டணியினர் அதிகாரத்துக்கு வர நினைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் இறுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்பட லாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் பலகட்டங்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். கோவை கொடிசியா மைதானத்தில் பாஜக சார்பில் நேற்று மாலை நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
சிந்தனையாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், விஞ்ஞானிகளை உருவாக்கியது கொங்கு மண். நடப்பாண்டு தமிழகம் புதிய அரசை தேர்ந்தெடுக்கப் போகிறது. இக்கட்டான சூழலில் இந்த தேர்தல் நடக்கிறது.
இந்திய மக்கள் வளர்ச்சியை மையப்படுத்தும் அரசையே விரும்புகின்றனர். வளர்ச்சிக்கு எதிரானவர்களை தள்ளி வைக்கவே விரும்புகின்றனர்.
நலத் திட்டங்கள் ஏழை மக்களைச் சென்றடைய வேண்டும். தேசிய முற் போக்கு கூட்டணி அரசும், தமிழக அரசும் கூட்டாட்சிக்கு உதாரணமாகத் திகழ்கின்றன. சிறு வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசாக இந்த அரசு இருக்கிறது.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைக்கு உதவ மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அவசரகால கடனுதவித் திட்டம் பலன் அளித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 3.05 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 3 ஆண்டுகளில் 7 பெரிய ஐவுளிப் பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன. 11 கோடி விவசாயிகள் பிரதமரின் கிஷான் கடன் அட்டை திட்டத்தால் பயனடைந்துள்ளனர். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 12 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழர் பண்பாடு பெருமைக்குரியது. உலகின் தொன்மையான மொழி தமிழ். தமிழர் திருவிழாக்கள் புகழ் பெற்றவை. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வியை வட்டார மொழியிலேயே வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் ஏராளமான இளைஞர்கள் பயன்பெறுவர்.
நாடு இரண்டு வேறுபட்ட அரசியலை கண்டுள்ளது. ஒன்று ஊழலுடன் கூடிய காட்டாட்சி. இன்னொன்று தேசிய ஐனநாயக கூட்டணியின் நல்லாட்சி. தங்களது சட்டைப்பையை நிறைக்கவே திமுக, காங்கிரஸ் கூட்டணியினர் அதிகாரத்துக்கு வர நினைக்கின்றனர். எப்படி கொள்ளையடிக்கலாம் என்பதற்காகவே தங்களது மூளையை செலவிடுகின்றனர்.
எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் அப்பாவி மக்களுக்கு தொல்லை தரும் சமூக விரோதிகளை தங்கள் பக்கம் வைத்திருக்கின்றனர். இதனால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுகவினர் எவ்வளவு தொல்லை கொடுத்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். திமுக ஆட்சியில் நிலவிய தொடர் மின்வெட்டை நீங்கள் மறக்க முடியுமா?
அந்தஸ்தை இழந்த திமுக
ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான கட்சி என்ற அந்தஸ்தை திமுக இழந்துவிட்டது. முழுப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து 25 ஆண்டுகள் ஆகிறது. அவர்களால் தமிழகத்தில் நல்ல ஆட்சியைக் கொடுக்க முடியாது.ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நோக்கம் தமிழகத்தின் நலன் மட்டும்தான். பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக, காங்கிரஸ் கட்சிகள் தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கையை ஏற்கவில்லை. அதிமுக, பாஜக அரசுகள்தான் அந்த சமுதாயத்தின் நீண்டநாள் கோரிக் கையை ஏற்றுக்கொண்டுள்ளன.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago