தமிழக அரசு திட்டமிட்டு, தகுந்த முன் னேற்பாடுகளைச் செய்தததால் ‘நிவர்’ புய லில் பாதிப்பு தமிழகத்தில் வெகுவாக குறைந்துள்ளது என்று கடலூர் மாவட் டத்தில் பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
வங்கக் கடலில் உருவான ‘நிவர்’ புயல் நேற்று முன்தினம் மாலை வலுப்பெற்று நேற்று அதிகாலை புதுச்சேரி - மரக்காணம் இடையே அலம்பரை கிராமத்தில் வலு குறைந்து கரையைக் கடந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் பெருமழை பெய்தது.
புயலின்போது பெரும் பாதிப்பை ஏற் படுத்தும் என்பதால் கடலூர் மாவட்டத்தில் முன் தடுப்பு நடவடிக்கையாக கடலூர் மாவட்டம் முழுவதும் 441 மையங்களில் 52,226 பேர் தங்க வைக்கப்பட்டனர். தாழ்வான பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வந்தன. கடலூர் மாவட்டத்தில் 12.57 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பல இடங்களில் நெல், வாழை, மணிலா பயிர்கள் சேதமாகியுள்ளன.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடு வதற்காக சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக கடலூருக்கு நேற்று முதல்வர் பழனிசாமி வந்தார். கடலூர் செல்லும் வழியில், ஆங்காங்கே கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சருக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய் திருந்ததாக தகவல் கிடைத்தது. இதையறிந்த முதல்வர், இதுபோன்ற இயற்கை இடர்பாடு நேரங்களில் மக்களின் பாதுகாப்பே முக்கியம்; எனவே தன்னை வரவேற்பதைத் தவிர்த்து கட்சி நிர்வாகிகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
முகாமில் நிவாரண உதவி
கடலூருக்கு வந்த முதல்வர் பழனிசாமி ரெட்டிச்சாவடி அருகே உள்ள கீழ் குமார மங்கலம் பகுதியில் பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் கடலூர் தேவனாம்பட்டினம் நகராட்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட் டிருந்த மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.முகாமில் தங்கியிருந்தவர்களிடம் சரி யான முறையில் உணவு வழங்கப்படு கிறதா, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதா என்று முதல்வர் கேட்டறிந்தார். அங்கு நடத்தப்பட்டு வரும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உடற் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அங்கிருந்தவர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கடலூர் துறைமுகத்துக்குச் சென்ற முதல்வர் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த படகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் எத்தனை படகுகள் உள்ளன, எவ்வளவு பேர் மீன் பிடிக்கச் செல்வார்கள் என்று அதிகாரி களிடம் கேட்டறிந்தார். அங்கிருந்த மீனவ மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். வழி நெடுகிலும் பொதுமக்கள் அளித்த மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.
ஆய்வு கூட்டம்
பின்னர் கடலூரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி உள்ளிட்ட அதிகாரி கள் உடன் இருந்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது: நிவர் புயலால் தமிழகத் தில் பெரிய பாதிப்பில்லை. புயல் பாதிப்பு தொடர்பான கணக்கெடுப்பு பணி யைத் தொடங்க அனைத்து மாவட்ட ஆட் சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தந்த எச்சரிக்கையின்படி தமிழகத்தில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதால் பாதிப்பு குறைந்தது. நானும் அமைச்சர்களும் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் கடலூர் ஆட்சிய ரிடம் தொடர்பு கொண்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வழங்கிய ஆலோசனையால் ‘நிவர்’ புயலால் கடலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.
உரிய நிவாரணம் கிடைக்கும்
தமிழகம் முழுவதும் 4,321 முகாம்கள் அமைக்கப்பட்டு, 13 லட்சம் பேரை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் 2,993 முகாம்களில் 2.30 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கடலூர் மாவட்டத்தில் 441 முகாம்களில் 52,226 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. புயல் தாக்கத் தால் 77 மின்கம்பங்களும் 321 மரங்களும் விழுந்துள்ளன. இவை உடனே சரி செய்யப்பட்டன.தமிழகம் முழுவதும் பாதிப்புகள் குறித்து கணக்கு எடுக்கப்பட்ட உடன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய நிவாரணம் வழங்கப்படும். பயிர் இன் சூரன்ஸ் செய்திருந்த விவசாயிகளுக்கு அந்த தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின்கம்பங்கள் உடைந்துள்ளதால் முழுமையாக ஆய்வு செய்து சீர் செய்யப்பட்டு படிப்படியாக மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
துணை முதல்வர் ஓபிஎஸ் ஆய்வு
இதேபோல், புயலால் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.வேளச்சேரி, தரமணி பெரியார் நகர் திட்டப்பகுதி, வீராங்கல் ஓடை, வேளச்சேரி அம்பேத்கர் நடைபாதைவாசிகள் திட்டப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற் காலிக முகாம், சீனிவாசபுரம் டும்மிங் குப்பம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய் தார். அத்துடன், குயில் தோட்டம் பகுதி களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
அதன்பின், தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக புயலால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தற்போது புயலுக்குப்பின் எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து பொறி யாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின் போது, மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர்.நடராஜ், வீட்டுவசதித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி, குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநர் இரா.கிர்லோஷ்குமார், இணை மேலாண் இயக்குநர் எஸ்.கோபால சுந்தரராஜ், முன்னாள் எம்பி ஜெ.ஜெயவர்தன், முன்னாள் எம்எல்ஏ அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
3 பேர் உயிரிழப்பு
வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் கூறும்போது, "அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தீவிரப் புயல் கரையை கடந்தும் பாதிப்பு குறைவாகவே இருந்தது. புயல் பாதிப்பால் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 3 பேர் காயமடைந்துள்ளனர். 89 குடிசை வீடுகள், 12 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. 26 ஆடு, மாடுகள் உயிரிழந்துள்ளன. 380 மரங்கள் சேதமடைந்துள்ளன. 19 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. நிவாரண முகாம்களில் 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 921 நிரந்தர மருத்துவ முகாம்களும், 234 நடமாடும் முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. 8,740 ஹெக்டேர் நெற்பயிர்கள், 914 ஹெக்டேர் வாழை, காய்கறிகள், மரவள்ளி உள் ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் சேதமடைந்தன" என்றனர்.29-ல் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வரும் 29-ம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தென் தமிழகத்தை நோக்கி வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நிவர் புயல் கரையை கடந்தது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிவர் புயல் மாலை 6 மணி நிலவரப்படி, தற்போது ஆந்திர மாநிலத்தில் திருப்பதியில் இருந்து 50 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவி வருகிறது. இது மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளது.
இதன் தாக்கத்தால் 27, 28 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, வரும் 29-ம் தேதி தெற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று தென் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இது புயலாக வலுப்பெறுமா என்பது குறித்து பின்னர்தான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago