சகோதரனே,
உன் ரத்தம் இந்த மண்ணை ஈரமாக்கியது
அதிலே தோய்ந்தன எமது பாவங்கள்.
உனது மவுனம் இப்போது
அந்தரத்தில் கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறது.
பொசுக்கப்பட்ட இந்த நகரம்
அந்தி நேரத்தில் பனி மூட்டத்தை சேகரித்து
உனது இறுதிக் கணங்களுக்கு
அஞ்சலி செலுத்துகிறது.
தன்னுடனேயே யுத்தம் நடத்திவரும்
ஒரு குடியரசின் யுத்தக் களமாக
உனது உடலே மாறிப்போனது.
இப்போது உனது பாடல் ரத்தம் தோய்ந்த
ஒப்பாரியாக மாறிப்போனது.
இப்போது தெரிந்துகொள்
உனது மரணத்தின் மூலம் எங்களது இதயங்களில்
புரட்சித் தீயைக் கொழுந்துவிட்டெரியச் செய்திருக்கிறாய்.
இப்போது தெரிந்துகொள்
எமது மலைகளிலிருந்து பாடல்கள் தெறிக்கின்றன.
இப்போது தெரிந்துகொள்
இந்த இரவில் எரியும் கரியின் வாசத்தை,
தூசியை, ரத்தத்தின் வாசத்தை எங்கள் நாசிகள் உணர்கின்றன.
உன்னோடு கூடவே இந்தப் புதிய உலகத்தில்
எண்ணற்ற கதைகளும் சிதறி விழுகின்றன…
- நாகா கவிஞரும் நாட்டுப்புறக் கலைஞருமான பேனி சுமேர் யான்தன் (யான்பேனி என்ற பெயரில் எழுதுபவர்) ஓடிங் சம்பவத்துக்குப் பிறகு எழுதிய கவிதை.
தமிழில்: வீ. பா. கணேசன்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago