உத்தம சோழனின் ‘சுந்தரவல்லி சொல்லாத கதை’ நாவலுக்கு 27.11.2021 அன்று கவிஞர் ஜே.எஸ். அனார்கலி எழுதிய சிறப்பான விமர்சனத்தைப் பார்த்து மகிழ்ந்தேன். அவரது விமர்சனம் அந்நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. விமர்சனத்தைப் படித்து முடித்தவுடன் அண்ணன் உத்தம சோழனுக்குக் கைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தேன். அவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
இருபது ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவம் ஒன்றை நினைவுகூர விரும்புகிறேன். செல்வராசு வருவாய்த் துறையில் அதிகாரியாக பணியாற்றிய காலம். அப்போது, பொதுப் பணித்துறை அதிகாரிகள் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடுவதில் எத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்; அப்பாவி கிராமத்து விவசாயிகளை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பது குறித்து தினமணி கதிரில் சிறுகதையொன்று வெளியாகியிருந்தது. அதனைப் படித்த நான் இது குறித்து அன்று திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் செல்வராசிடம், “அண்ணே இன்று கதிரில் ஒரு கதை படித்தேன். மிக எதார்த்தமாக இருந்தது. நன்றாக எழுதியிருக்கிறான்” என்று குறிப்பிட்டேன். அவரும் அப்படியா “நல்லா எழுதியிருந்தானா?” என்று கேட்டு சிரித்தார். உடன் இருந்த தினமணி நாளேட்டின் செய்தியாளர் ரவி “அண்ணே அந்தக் கதையை எழுதியது அண்ணன்தான்” என்று குறிப்பிட்டார். “சாரி அண்ணே” என்று கூறினேன். ஏனெனில், செல்வராசுதான் ‘உத்தம சோழன்’ என்ற புனைபெயரில் எழுதிவருகிறார் என்ற உண்மை அன்றுதான் எனக்குத் தெரிந்தது. வருவாய்த் துறையில் பணியாற்றியவாறே சிறுகதை, நாவல் என்று எழுதி நல்ல எழுத்தாளராக அவர் முன்னேறியிருப்பது மிக்க மகிழ்ச்சி. அவரது நாவல் குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டில் விமர்சனம் வெளியிட்டமைக்கு நன்றி, மகிழ்ச்சி!
- இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago