ஞாயிறு அன்று வெளியான ‘வானவில் அரங்கம்’ பகுதியில் மால்கம் ஆதிசேசய்யாவை நினைவுகூர்ந்தது போற்றத்தக்கது. அவர் யுனெஸ்கோவிலிருந்து ஓய்வுபெற்று சென்னை வந்ததும் சேலத்தில் நடைபெற்ற எஸ்.ஐ.டி.யூ. என அறியப்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் ஆண்டு மாநாட்டில் தொடக்க உரை நிகழ்த்த அழைக்கப்பட்டார். நீண்டதொரு உரையை அனுப்பியதுடன் அதனைத் தமிழ்ப்படுத்தி உறுப்பினர்களுக்கு அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். நிர்வாகவியலில் ‘SWOT Analysis’ என்று சொல்லப்படும் முறையில் தமிழகக் கல்வியின் பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள், நடைமுறைகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு அனுப்பினார். தமிழறிஞர் ம.இரா.போ. குருசாமி அந்த உரையை ஒரே இரவில் தமிழ்ப்படுத்த கோவை கலைக்கதிர் அச்சகம் உரையை இரு மொழிகளிலும் அச்சடித்துக் கொடுக்க, அந்த உரையை மால்கம் ஆதிசேசய்யா மாநாட்டில் ஆற்றினார். ஆசிரியர் மாநாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அவரது உரை அமைந்தது. அவரது எம்ஐடிஎஸ் ஆய்வு மையத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று 13 கல்வியாளர்கள் பங்கேற்கும் விவாத மேடையை நடத்தினார். ஒரு விநாடி தவறாது 5 மணிக்குத் தொடங்கி 7 மணிக்கு முடிவடையும் அக்கருத்தரங்குகளில் பள்ளி ஆசிரியரான நானும் பங்கேற்றேன். அவர் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது வெட்டிப் பேச்சுகளுக்கு இடமளிக்காது நிர்வாகக் கூட்டங்களை நடத்தியது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு புதுமை. முதியோர் கல்வியில் அதிக நாட்டம் கொண்டவர். அதற்காகத் தனி அமைப்பு ஒன்றையும் அமைத்தார். அவரது சிந்தனைகளுக்கும், வேகத்துக்கும் தமிழகக் கல்வி அன்று கைகொடுக்க இயலாமல் போனது வருந்தத்தக்கது.
- ச.சீ.இராஜகோபாலன், மூத்த கல்வியாளர், சென்னை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago