மழை வெள்ளத்தில் மிதக்கும் புத்தகங்கள்
2015-ம் ஆண்டுக்குத் திரும்பியதுபோல் இருக்கிறது. சென்னை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள்ளும் கட்டிடங்களுக்குள்ளும் புகுந்ததால் பலருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த மழை வெள்ளத்துக்குப் புத்தகங்களும் தப்பிக்கவில்லை. சென்னையில் உள்ள ‘இந்து தமிழ் திசை’ அலுவலகத்தில் தரைத் தளத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள், பத்திரிகைச் சேகரிப்புகள் மழை நீரில் மூழ்கின. திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட் அருகில் உள்ள ‘குட்வேர்ட்’ புத்தகக் கடையில் மழை நீர் புகுந்ததால், ரூ.5 லட்சத்துக்கு மேல் மதிப்பிலான புத்தகங்கள் மழை நீரில் மூழ்கி வீணாகியுள்ளன. ஏற்கெனவே, பதிப்பகங்கள், புத்தகக் கடைகள் நெருக்கடியில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் மீண்டும் ஒரு பேரிழப்பு. பலர் தங்கள் வீடுகளில் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களும் இந்த மழை வெள்ளத்தால் வீணாகியுள்ளன. 2015 சென்னை மழை வெள்ளத்தாலும் இப்படித்தான் பதிப்பாளர்களும் வாசகர்களும் பெருமளவில் புத்தகங்களைப் பறிகொடுத்தனர். மறு ஆண்டு வந்த புத்தகக் கண்காட்சியில் வாசகர்களுக்குக் கூடுதல் சலுகை வழங்கப்பட்டது. பதிப்பாளர்களுக்குக் காப்பீட்டுத் திட்டம் இருந்தாலும் அது குறித்துப் பலருக்கும் விழிப்புணர்வு இல்லை. இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களின்போது பதிப்புலகம் பாதிக்கப்பட்டால், தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் தர வேண்டும் என்று பதிப்பாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
புத்தகக்காட்சி
திருப்பத்தூர் புத்தகக்காட்சியும் விருதுகளும்: திருப்பத்தூர் மாவட்டப் புத்தகத் திருவிழா வரும் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறுகிறது. இந்தப் புத்தகக்காட்சி வளாகத்தை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவும் புத்தகக்காட்சி அரங்குகளை மேனாள் நீதியரசர் கே.சந்துருவும் திறந்துவைக்கிறார்கள். இவ்விழாவில் படித்துறை புத்தக அறக்கட்டளையின் கலை இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. ரவிசுப்பிரமணியனுக்கு ‘இலக்கிய ஆளுமை’ விருது வழங்கப்படுகிறது. இதற்கான பரிசுத் தொகை ரூ.50,000. நாவலுக்காக சீனிவாசன் நடராஜன், சிறுகதைத் தொகுப்புக்காக பாவெல் சக்தி, கட்டுரைத் தொகுப்புக்காக கனலி விக்னேஸ்வரன், மொழிபெயர்ப்புக்காக ஷஹிதா, கவிதைக்காக ரத்னா வெங்கட், சிறார் நூலுக்காக பூவிதழ் உமேஷ், நூல் வடிவமைப்புக்காக கே.வி.ஷைலஜா ஆகியோருக்குத் தலா ரூ.5000 ரூபாய் தொகையுடன் கூடிய விருது வழங்கப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நீதியரசர் ஆர்.மகாதேவன் இந்த விருதுகளை வழங்குகிறார். விருதாளர்களுக்கு வாழ்த்துகள்! புத்தகக்காட்சி குறித்துத் தொடர்புகொள்ள: 8883488866
நாகர்கோவில் புத்தகக்காட்சி: மக்கள் வாசிப்பு இயக்கமும் முன்னேற்றப் பதிப்பகமும் சேர்ந்து நடத்தும் நாகர்கோவில் புத்தகக்காட்சி கடந்த 16-ம் தேதி தொடங்கியிருக்கிறது. இந்தப் புத்தகக்காட்சி டிசம்பர் 31 வரை நடைபெறுகிறது. இடம்: வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டிடம் (போத்தீஸ் எதிரில்), நாகர்கோவில். நேரம்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு: 8825755682.
மடிப்பாக்கம் புத்தகக்காட்சி: மதுரை மீனாட்சி புத்தக நிலையம் நடத்தும் புத்தகக்காட்சி கடந்த 12-ம் தேதி சென்னை மடிப்பாக்கத்தில் தொடங்கியது. இந்தப் புத்தகக்காட்சி நவம்பர் 30 வரை நடைபெறுகிறது. இடம்: செல்லம்மாள் சக்தி திருமண மாளிகை, மேடவாக்கம் பிரதான சாலை, மடிப்பாக்கம். நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு: 9443262763.
அனைத்துப் புத்தகக்காட்சிகளிலும் ‘இந்து தமிழ் திசை’யின் வெளியீடுகள் உட்பட அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இயல் விருது!
‘கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்’ அமைப்பு வழங்கும் 2021-க்கான ‘இயல்’ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கவிதைக்கான விருது பெருந்தேவிக்கும், புனைவுக்கான விருது ‘இடபம்’ என்ற நாவலுக்காக பா.கண்மணிக்கும், இலக்கிய சாதனை சிறப்பு விருது கனடாவிலிருந்து வெளிவரும் ‘தாய்வீடு’ மாத இதழின் முதன்மை ஆசிரியர் பி.ஜெ.டிலிப்குமாருக்கும், பிறமொழி இலக்கிய விருது லோகதாசன் தர்மதுரைக்கும், தமிழ்த் தொண்டு விருது வீரகத்தி சுதர்ஷனுக்கும் வழங்கப்படுகிறது. விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் கனடிய டாலர்கள் 500 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 ஆயிரம்) விருதுத் தொகையும் கேடயமும் வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 4-ம் தேதியன்று இந்தியா - இலங்கை நேரத்தின்படி இரவு 8.30 மணிக்கு இணைய வழியில் நடைபெறும். இதற்கான ஐடி: 811 4968 3360; பாஸ்வேர்டு: 078782. விருதாளர்களுக்கு வாழ்த்துகள்! விட்டல் ராவ் படைப்புலகத்துக்காக ஒரு நாள்
எழுத்தாளர் விட்டல் ராவின் படைப்புலகத்துக்காக நாளை (ஞாயிறு) முழு நாள் கருத்தரங்கம் சேலத்தில் நடைபெறுகிறது. சிற்றில் குழுமம், பாலம் புக்ஸ், சொற்சுனை அமைப்பு மூன்றும் இணைந்து இந்த நிகழ்வை நடத்துகின்றன. விட்டல் ராவின் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றுக்குத் தனித் தனி அமர்வுகள் இடம்பெறுகின்றன. கிட்டத்தட்ட 20 எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு விட்டல் ராவின் படைப்புகள் பற்றிப் பேசவிருக்கிறார்கள். சேலம் நேஷனல் ஓட்டலில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்வு மாலை வரை நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago