செய் அல்லது செத்துமடி! :

By செய்திப்பிரிவு

வரலாற்றில் பூவுலகின் சராசரி வெப்பநிலை 2015 தொடங்கி, கடந்த ஏழு ஆண்டுகளிலும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இப்போது நாம் கடந்துகொண்டிருக்கும் 2021-ம் இந்தப் பட்டியலிலிருந்து தப்பவில்லை. இதுவரை பதிவானவற்றில் அதிக சராசரி வெப்பநிலை கொண்ட ஐந்தாவது அல்லது ஏழாவது ஆண்டாக 2021 இருக்கும். இவ்வளவுக்கும் முதல் 9 மாத சராசரி வெப்பநிலை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டிருக்கிறது.

உலக வானிலை ஆய்வு அமைப்பு (WMO) வெளியிட்ட ‘உலக பருவநிலை அறிக்கை, 2021’ மூலம் இந்தத் தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. 26-வது உலகப் பருவநிலை மாநாடு கிளாஸ்கோவில் தொடங்குவதற்கு முன்பாக இந்த அறிக்கை வெளியானது. “தீவிர இயற்கைப் பேரிடர்கள் இயல்பாகிவருகின்றன. மனிதர்களால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றம் ஏற்படுத்திய விளைவுகளே இவற்றில் பலவற்றுக்கு அடிப்படைக் காரணம் என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் வலுவடைந்துவருகின்றன” என்று உலக வானிலை ஆய்வு அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்டெரி டாலஸ் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்திய கேரள நிலச்சரிவு, சென்னை வெள்ளம், உத்தராகண்ட் நிலச்சரிவு-வெள்ளம் போன்றவற்றுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நேரடித் தொடர்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. என்றாலும், பருவநிலை மாற்றம் காரணமாக இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கும் என அறிவியலர்கள் நீண்டகாலமாகவே எச்சரித்துவருகிறார்கள். இவை அனைத்துக்கும் வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்கள் அதிகரித்ததன் தொடர்ச்சியாகப் புவியின் சராசரி வெப்பநிலை அதிகரித்ததே முதன்மைக் காரணம். நம் கண் முன்னாலேயே பூவுலகின் பருவநிலை எவ்வளவு மோசமாக சீர்கெட்டுவருகிறது என்பதற்கான அத்தாட்சியாக வானிலை ஆய்வு அமைப்பின் அறிக்கை கருதப்படுகிறது. ஒருபுறம் கிரீன்லாந்து பனிச் சிகரப் பகுதியில் வரலாற்றிலேயே முதன்முறையாக பனிபொழிவதற்குப் பதிலாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் மழை பெய்தது. சமீபத்திய ஆண்டுகளில் உலகெங்கும் காட்டுத்தீ நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.

2013 முதல் உயர்ந்துவரும் உலகக் கடல் மட்டம், 2021-ல் உச்சத்தைத் தொட்டுள்ளது. சராசரி வெப்பநிலை அதிகரிப்பின் தொடர்ச்சியாகப் பெருங்கடல்கள் வெப்பமடைவதும் பெருங்கடல்கள் அமிலமயமாவதுமே இதற்கு முதன்மைக் காரணம். இந்த நிகழ்வுகளால் உலகெங்கும் உள்ள சூழலியல் தொகுதிகள் மட்டுமல்லாமல், மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருகிறார்கள்.

இந்தப் பேரழிவுகளைத் தடுத்து நிறுத்தி, உலகம் இயல்பாவதற்கு கிளாஸ்கோவில் தற்போது நடைபெற்றுவரும் 26-வது பருவநிலை மாற்ற மாநாட்டில் உறுதியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அப்படி அங்கே திட்டவட்டமான முடிவுகள் எட்டப்படவில்லை என்றால், மனித குலம் சந்திக்க உள்ள எதிர்காலப் பேரழிவுகளைக் கட்டுப்படுத்த முடியாது என்பதையே வானிலை ஆய்வு அமைப்பின் அறிக்கையும் மீண்டும் ஒரு முறை வலியுறுத்திச் சொல்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்