வாக்ரிகள் என்று அழைப்போம்! :

By செய்திப்பிரிவு

நேற்றைய (01-11-2021) தலையங்கத்தில் ஒரு விளிம்பு நிலைச் சமூகம் குறித்து வெளிப்பட்டிருக்கும் கரிசனம் பாராட்டுக்குரியது. ஆனால், அச்சமூகம் ‘வாக்ரிபோலி’ என்ற மொழியின் அடிப்படையில் ‘வாக்ரிகள்’ என அழைக்கப்படுவதைக் கவனத்தில் கொண்டு அந்தப் பெயரைப் பயன்படுத்தியிருக்கலாம். உங்களைப் போன்ற நாளிதழ்கள்தான் அடைப்புக்குறிக்குள்ளாவது இப்பெயர்களைக் குறிப்பிட்டு எழுதி, அவற்றைப் பொதுப் பயன்பாட்டுக்கு வர உதவி புரிய வேண்டும் என்று வாசகர்களாகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

நாடோடிப் பழங்குடிச் சமூகமான வாக்ரிகள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதாலும் வாக்கு வங்கியாகத் திரட்டப்படாத காரணத்தாலும் ஆளும் வர்க்கங்கள் இவர்களைக் கண்டுகொள்வதில்லை. ஆந்திரம், கர்நாடகம், குஜராத் போன்ற ஒருசில மாநிலங்களில் வாக்ரிகள் பழங்குடியினர் பட்டியலில் (ST) வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இவர்கள் மிகவும் பிற்பட்டோர் (MBC) பட்டியலில் உள்ளனர். இவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கும் மசோதா பல்லாண்டாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் வாக்ரிகளுக்கு மிகவும் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் எத்தகைய பங்கு கிடைக்கும் என்பதை உணர பெரிய ஆய்வெல்லாம் தேவையில்லை. உள் ஒதுக்கீடுகள் இம்மாதிரியான விளிம்புநிலைச் சமூகங்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வாக்ரிகளுடன் சேர்ந்து உணவருந்தியது வரவேற்க வேண்டிய ஒன்று. பேருந்து, திரையரங்கம், கோயில் அன்னதானம் போன்றவற்றில் வாக்ரிகள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வது அவசியமே. இவற்றையும் தாண்டி அவர்களது சமூகநிலை உயர்வதற்காக சமூகநீதி நிலைநாட்டப்படுவது குறித்தும் தலையங்கம் கூடுதல் அக்கறைகளை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று கருதுகிறேன்.

- மு.சிவகுருநாதன், திருவாரூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்