தேவை ஒரு பண்பாட்டுப் பல்கலைக்கழகம்! :

By செய்திப்பிரிவு

செப்டம்பர் 27 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான ‘ஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்!’ என்ற தலையங்கத்தைப் படித்தேன். ஆலயங்களை மன்னர்கள் கட்டும்போதும் கட்டி முடித்த பின்னும் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன. அத்துடன் கோயில்கள் கல்வி நிலையங்களாகவும் இருந்தன. கலைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. தினமும் அன்னதானம் நடந்தது. இதுதான் நம் கோயில்களின் வரலாறும் நடைமுறையும். அறநிலையத் துறையின் நிர்வாகம் சீர்திருத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் பக்தர்களுக்குப் பல வருடங்களாக இருந்து வந்துள்ளது. புதிய ஆட்சியில், அறநிலையத் துறையின் செயல்பாடுகள் சீரமைக்கப்பட்டுவருகின்றன.

இது பாராட்டத்தக்கது. ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படுகின்றன என்பதும் வரவேற்கத்தக்கது. இப்போது அறநிலையத் துறை சார்பாகக் கலை, பண்பாட்டுக்காக ஒரு பல்கலைக்கழகம் உருவாக வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்தபோது, பழனி தண்டாயுதபாணி தேவஸ்தானம் பண்பாட்டுக் கல்விக்கென்று பி.ஏ., படிப்புடன் கல்லூரியைத் தொடங்கியது. கல்லூரியில் ஒரு பெரிய வளமான நூலகம் இருந்தது. கற்பிக்கப்பட்ட பாடங்கள்: இந்தியப் பண்பாடு, இந்தியத் தத்துவம், இந்திய நுண்கலைகள், சைவம், வைணவம், ஆகியவை. இப்படி வாழ்க்கையை முழுமைப்படுத்திக் காட்டும் கல்வி தமிழ்நாட்டில் வேறெங்கும் அப்போது கற்பிக்கப்படவில்லை. இப்போதும் இல்லை.

“இந்தக் கல்லூரி மாணவர்கள் எந்த வேலைக்குச் செல்ல முடியும்?” என்று ‘தி இந்து’ இதழின் நிருபர் கேட்டபோது அப்போதைய முதல்வர் சரவண ஆறுமுக முதலியார் இப்படிச் சொன்னார். “இங்கே மாணவர்கள் பயில்வது வேலைக்காக இல்லை... வாழ்க்கைக்காக.” அந்தக் கல்லூரியில் படித்தவர்கள் நூலகர்களாக, உடற்பயிற்சி ஆசிரியர்களாக, ஆங்கில, தமிழ்ப் பேராசிரியர்களாக, போலீஸ் அதிகாரிகளாக, அரசாங்க அதிகாரிகளாக, வக்கீல்களாக, நீதிபதிகளாக, கோயில் நிர்வாக அதிகாரிகளாக, ஆடிட்டர்களாகப் பல துறைகளில் நுழைந்தார்கள். சிலர் ஐஏஎஸ் அதிகாரிகளாக ஆனார்கள். ஒருவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.கே.கிருஷ்ணன். இன்னொருவர், சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த வணங்காமுடி.அறநிலையத் துறையில் எவ்வளவோ சீர்திருத்தங்களையும், புதுமைகளையும் செய்துவரும் தமிழ்நாட்டு அரசாங்கம் பழனியில் இந்தியப் பண்பாட்டுக்கு என்று ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்க நடவடிக்கை எடுத்தால், அது வளரும் தலைமுறையினருக்கு நம் பாரம்பரியத்தின் மீது நாட்டம்கொள்ளப் பேருதவியாக இருக்கும்.

- நல்லி குப்புசாமி செட்டியார், கலாச்சார ஆர்வலர், உரிமையாளர், நல்லி சில்க்ஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்