இந்தியாவின் பெரும்பான்மையான பெரிய மாநிலங்களில் வளர்ச்சி இல்லாமை குறித்தும், அந்த மாநிலங்களைப் பிரிப்பது தொடர்பாக எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்தும் பாமக நிறுவனர் ச.ராமதாஸ் தனது முகநூல் கட்டுரையில் விரிவாக விளக்கியிருந்தார். கடந்த 20 ஆண்டுகளில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களின் வளர்ச்சி அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பெரிய மாநிலங்களைப் பிரித்து, புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளைப் பரிசீலிக்கலாம் என்றதுடன், தமிழகத்திலும் அத்தகைய கோரிக்கைகள் எழுந்திருப்பதை நினைவுகூர்ந்திருந்தார். புதிய மாநிலங்களை உருவாக்கக் கோருவது சாதி, மதம், மொழி சார்ந்த பிரச்சினை அல்ல; அது வளர்ச்சி சார்ந்த பிரச்சினை. ஆந்திரத்தின் ஓர் அங்கமாக இருந்தபோது, வளர்ச்சியில்லாத பகுதியாக இருந்த தெலங்கானா, கடந்த பத்தாண்டுகளில் வேளாண்மை, நீர்ப்பாசனம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் வளர்ச்சியடைந்துவருகிறது. ஆந்திரம், தெலங்கானா இரு மாநிலங்களும் தெலுங்கு பேசும் மாநிலங்கள்தான் என்றாலும், இரண்டாகப் பிரிந்து போட்டிபோட்டு வளர்ந்துவருகின்றன. புதிய மாநிலங்கள் தொடர்பான மக்களின் கோரிக்கைகள் தொடக்கத்தில் சிறு துளியாகத்தான் தெரியும். அதைச் சுண்டுவிரலால் தடுத்துவிடலாம் என்று சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர்களுக்குத் தோன்றும். ஆனால், காலப்போக்கில் அந்தக் கோரிக்கையானது காட்டாற்று வெள்ளமாக மாறும்போது, எதிர்ப்பவர்கள் அனைவரையும் அடித்துச்செல்லும். நாளைய வரலாறு இதை எழுதும்.
- கே.பாலு, வழக்கறிஞர், பாமக.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago