பி.எஸ். கவின் எழுதிய ‘தமிழ்த் தேசியத்தின் அரசியல் செல்வாக்கு’ என்ற கட்டுரை தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு நூற்றாண்டு காலப் பலவீனமான எதார்த்தச் சூழலை மட்டும் அழகாகத் தொகுத்துத் தந்துள்ளது. ஆனால், அதற்கான காரணகாரியங்களையும் விளக்கியிருந்தால் வெளிச்சம் தருவதாக இருந்திருக்கும். எந்தவொரு தேசிய அரசியலுக்கும் தேசிய முதலாளிகளின் உருவாக்கம் முதல் நிபந்தனை. இந்திய தேசியம் கட்டமைக்கப்பட்ட வரலாற்றைக் கவனித்தாலே புரிந்துவிடும். தமிழ்நாட்டில் அத்தகைய தமிழ்த் தேசிய முதலாளிகள் உருவாகாமல் இந்தியத் தேசிய முதலாளிகள் பார்த்துக்கொண்டார்கள். அந்த ஒரு வரலாற்றையாவது விளக்கியிருக்கலாம். தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்துக்கான உட்பகைகள் ஏராளம். இந்த உட்பகைகளுக்கு நூற்றாண்டு கால வரலாறு உண்டு. இந்த வரலாற்றின் வலுவை உணர்ந்துதான் ‘திராவிடம்’ என்ற ஒரு பதாகையின் கீழ் பதுங்கிக்கொண்டு தமிழ்த் தேசிய உணர்வைக் கட்டமைக்கப் பெருமுயற்சி எடுக்கப்பட்டது. அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது அவலம். இந்திய முதலாளிகளின் தந்திரம் உலக யூத முதலாளிகளின் தந்திரத்தைவிட நுட்பமானது. இப்படிப் பல காரணங்கள் இருக்கின்றன. இப்படியான ஒரு தேடலுக்கு மிக அருமையான முறையில் வாசல்களைத் திறந்துவிட்டுள்ள ஒரு கட்டுரையை ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளியிட்டதற்கு எனது பாராட்டையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- க.பஞ்சாங்கம், எழுத்தாளர், பேராசிரியர், புதுச்சேரி - 8
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago