கரோனா தடுப்பூசி போடப்படுவதில் மருத்துவத் துறை சார்ந்த முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது வரவேற்கத் தக்கது. ஆனால், ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் முன்களப் பணியாளர்கள் என்ற தகுதியைப் போல் அதில் பணிபுரியும் வேறு துறையைச் சேர்ந்த எண்ணற்ற தொழிலாளர்கள் உள்ளனர். மருத்துவர் அல்லாத பாராமெடிக்கல் ஊழியர்கள் பலரும் உள்ளனர். கண் பார்வை, செவித் திறன், பேச்சுத் திறன், முடக்குவியல் துறை என்று பல முன்களப் பணியாளர்கள் தினம் மருத்துவமனையில் நோயாளிகளுடன் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். ஆய்வகத் தொழிலாளர், துப்புரவுத் தொழிலாளர்கள், வாயிற்காப்போர் என்று கண்களுக்குத் தெரியாமல் பின்னால் இருந்து செயல்படுவோரும் முன்களப் பணியாளர்கள்தான். மருத்துவமனைக்கு வெளியே இருந்து இயங்கும் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள், உற்பத்தியாளர்கள், அதைக் கொண்டுசெல்லும் மருந்து நிறுவனங்கள், மருந்துக் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் , ஆக்ஸிஜன் உருளை விநியோகிக்கும் நிறுவனம், அதன் ஊழியர்கள், மருத்துவ உபகரணங்களைக் கையாளும் ஊழியர்கள், வீட்டு வாசலில் வந்து குப்பையைப் பெற்றுச்செல்லும் தோழர்கள், இன்னமும் வீடுவீடாய் ஏறி இறங்கி ‘காய்ச்சல் இருக்கிறதா, தும்மல் இருக்கிறதா?’ என்று அக்கறையாக விசாரிக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் தன்னார்வலர்களும்கூட முன்களப் பணியாளர்கள்தான் இல்லையா? அவசியமான முன்னுரிமைப் பட்டியலின் பரப்பு விரிவுபெற வேண்டும்.
- பாலாஜி வெங்கட்ராமன், மின்னஞ்சல் வழியாக.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago