நியூசிலாந்தில் தமிழோசை!

By செய்திப்பிரிவு

நியூசிலாந்து தமிழ்ப் புத்தக மன்றத்தின் தொடக்க விழா நேற்று கிறைஸ்ட்சர்ச் நகரின் துரங்கா நூலகத்தில் நடத்தப்பட்டது. தன்னார்வக் குழுவினர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். தமிழ் மொழி வாசிப்பையும் பேச்சையும் எழுதுவதையும் நியூசிலாந்தில் வசிக்கும் தமிழர்களிடையே ஊக்குவிப்பதற்காக இந்தக் குழு தொடங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் இந்த மன்றத்திலிருந்து வாசிப்பதற்காகத் தமிழ்ப் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு, வாசித்ததும் திரும்ப அளிக்கலாம். இந்த மன்றத்துக்காகத் தமிழகத்திலிருந்து பெரும்பாலான புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தன. மேலும், தமிழகத்திலிருந்து நன்கொடையாக நிறைய புத்தகங்களைச் சேகரிக்கும் திட்டத்தில் மன்றக் குழுவினர் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நியூசிலாந்து தமிழ்ப் புத்தக மன்றமும், இலங்கையிலுள்ள தமிழ் விவாத மன்றமும் ஒன்றுசேர்ந்து இணைய வழி விவாத நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்திருந்தனர். ‘கரோனா பெருந்தொற்று சமூகத்திடையே ஏற்படுத்தியிருப்பது நெருக்கத்தையே/ பிளவையே’ என்ற தலைப்பில் நடந்த இந்த விவாதத்தில் நெருக்கத்தையே எனும் தலைப்பில் நியூசிலாந்து அணியினரும், பிளவையே எனும் தலைப்பில் இலங்கை அணியினரும் வாதிட்டனர். விவாத நிகழ்வின் நடுவராக ரோஜா முத்தையா நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன் கலந்துகொண்டார். விவாதத்தின் முடிவில் ‘இந்தப் பெருந்தொற்று சமூகத்தில் சிறு சிறு பிளவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் பெருமளவில் ஏற்படுத்தியிருப்பது நெருக்கத்தையே’ என்று சுந்தர் தீர்ப்பளித்தார். நியூசிலாந்து தமிழர்களிடையே தமிழ் வாசிப்பு பரவட்டும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்