நாம் வாழும் காலத்தில் இதற்கு முன் எதிர்கொண்டிராத மிகப் பெரிய சவால் ஒன்றைக் கடந்து புதிய ஆண்டுக்குள் அடியெடுத்துவைத்திருக்கிறோம். கொள்ளைநோய்கள் குறித்து இதற்கு முன் கேட்டதையும் படித்ததையும் காட்டிலும் மிகப் பெரிய பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. உலகளாவிய போக்குவரத்தின் பயன்கள் ஒருபுறமிருக்க தொற்றுப் பரவலுக்கும் அது ஒரு காரணமாக இருப்பதைக் கண்டுகொண்டிருக்கிறோம். அதேவேளையில், நவீனத் தகவல் தொழில்நுட்ப வசதிகளின் பயனாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும் வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறோம். புதிய தொற்றுகளை உடனடியாக அறிந்துகொள்ளவும் அவற்றைக் குறித்து ஆராய்ச்சி செய்யவும் அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளத் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கவும் கடந்த காலங்களைக் காட்டிலும் மருத்துவ அறிவியல் பன்மடங்கு வளர்ச்சிபெற்றிருக்கிறது.
இந்தப் புதிய ஆண்டின் பாதியிலிலேயே கரோனாவுக்கான தடுப்பு மருந்து அனைவரையும் சென்றுசேர்வதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. ஏற்கெனவே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட்டுக்கொண்டிருக்கும்போது, அதன் உருமாறிய வடிவம் ஒன்று பரவ ஆரம்பித்திருப்பதும் கவலைக்கொள்ளச் செய்கிறது. எனினும், மனித சமுதாயம் எல்லாக் காலங்களிலுமே தொற்றுநோய்களுடன் போராட்டங்களை நடத்தியபடியேதான் சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் முன்னகர்ந்துகொண்டிருக்கிறது. நாம் வாழும் காலத்தில் அறிவியல் துறையின் வளர்ச்சி மேலும் நமக்குத் துணையாக நிற்கக்கூடும்.
புதிய நோய்த்தொற்றுகளின் உருவாக்கத்துக்கும் பரவலுக்கும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களும் ஒரு முக்கியமான காரணமாக இருப்பதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றாலும் அந்த உண்மையின் உக்கிரத்தை இப்போதுதான் அழுத்தமாக உணர்ந்துகொண்டிருக்கிறோம். நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் போலவே, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் அதன் சமநிலை பிறழாமல் தொடர்வதற்கும் உரிய கவனத்தைச் செலுத்த வேண்டும். பொருளாதார நிலையில் முன்னேறிய சில நாடுகள் தங்களது குடிமக்களைப் பாதுகாப்பதற்குத் தொற்றுநோய்த் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் விநியோகிப்பதிலும் அவசரம் காட்டிவரும் நிலையில், வறிய நிலையில் இருக்கும் நாடுகளுக்கு இன்னும் அந்த வாய்ப்பு எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது. தடுப்பு மருந்துக்காகப் பணக்கார நாடுகளிடம் கையேந்தி நிற்கும் நிலையில்தான் அவை உள்ளன. இன்றைய உலகமயக் காலகட்டத்தில் இத்தகைய மானுட நெருக்கடிகளுக்குக் கூட்டுத் தீர்வுகளை எடுக்கவும் செயல்படுத்தவும் பன்னாட்டு அமைப்புகளை இன்னும் வலுப்படுத்த வேண்டியிருப்பதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் இது எடுத்துச்சொல்கிறது.
இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில் தொற்றுநோய்ப் பரவல் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரப் பாதிப்புகள் தவிர்க்க முடியாதது. பாதிப்புகளைக் களைவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிகளை எடுத்துவருகின்றன. அரசு நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்தாலும், இத்தகைய அரசு நடவடிக்கைகளால் மட்டுமே பொருளாதார நிலை முற்றிலும் சரிந்துவிடாமல் பாதுகாக்கப்படுகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுத்து மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைப்பதற்கு அரசின் முயற்சிகள் மட்டுமே ஒருபோதும் போதாது. ஒவ்வொருவருக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது. மனித வரலாறே உழைப்பின் வரலாறுதான். நம்பிக்கையோடு இந்த ஆண்டை வரவேற்போம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago