பிரிட்டனில் கரோனா வைரஸின் மாறுபட்ட வேற்று வடிவம் ஒன்று பரவ ஆரம்பித்திருப்பதை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு எடுத்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்தைச் சில ஐரோப்பிய நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதைப் போலவே இந்தியாவும் அதே வழிமுறையைப் பின்பற்றி, டிசம்பர் 31 வரை தற்காலிகமாக பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளது.
பிரிட்டனில் லண்டன் மாநகரத்திலும் தென்கிழக்கு இங்கிலாந்திலும் கடுமையான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 2020-ல் கண்டறியப்பட்ட வேற்று வடிவமான வியுஐ-202012/01 மொத்தம் 23 மாற்றங்களைக் கண்டுள்ளது. இவற்றில், ‘என்501ஒய்’ என்னும் புரத மாறுபாடானது மிகவும் எளிதில் பரவக் கூடியதாக உள்ளது. நவம்பர் முதல் இந்த மாறுபட்ட புதிய வடிவம் பரவ ஆரம்பித்திருக்கலாம் என்றும், பிரிட்டனில் கரோனா அதிகளவில் பரவிவருவதற்கு இந்த வைரஸின் புதிய வடிவம்தான் முக்கியக் காரணம் என்றும் கூறப்படுகிறது. மாதிரி ஆய்வுகளின் அடிப்படையில், இந்தப் புதிய மாறுபாட்டின் தொற்றும் வேகம் 70% அதிகம் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது முதல் நிலை ஆய்வு என்றும், இந்தப் புதிய தொற்று பரவ ஆரம்பித்தால், உலகளவில் ஆயிரம் பேரில் நான்கு பேர் பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கிறது என்றும் நோய் முன்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் எச்சரித்துள்ளது. எனினும், நோயின் தீவிரத்திலோ அல்லது மறுதொற்றுக்கான வாய்ப்பிலோ இதுவரை எந்த மாற்றங்களும் கண்டறியப்படவில்லை.
வைரஸின் புரதப் பகுதியில் உருவாகியிருக்கும் மாற்றங்களானது கரோனா தடுப்பூசிகளிலும் புதிய தேவைகளை உருவாக்கியுள்ளன. தடுப்பூசியால் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பாற்றல் வைரஸின் புரதங்களில் மாற்றங்களை உருவாக்குகிறது. வைரஸ் வெவ்வேறு விதமான புரத மாற்றங்களை அடைகிறபோது, தடுப்பூசிகளுக்கு மேலும் வீரியம் தேவைப்படுகிறது. அதன் காரணமாக, தடுப்பூசிகளால் ஏற்பட்ட விளைவுகளைக் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தையும் இந்தப் புரத மாறுபாடுகள் ஏற்படுத்தியுள்ளன. ‘ஆர்என்ஏ’ வைரஸான கரோனா, கடுமையான புரத மாற்றங்களை அடைந்துவந்த நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வடிவமானது 23 விதமான புரத மாற்றங்களை மட்டுமே அடைந்துள்ளது. எனவே, புரதங்களில் ஏற்பட்ட படிப்படியான மாற்றங்களின் காரணமாக உருவெடுத்த வைரஸ் என இதை உறுதிபடக் கூற முடியாது. தனி நோயாளி ஒருவர், நீண்ட கால நோய்ப் பாதிப்பில் இருக்கும்போது அவரது நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்துவிடுவது இயல்பே. வைரஸின் புதிய வடிவத்தால், சிலர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருந்தாலும், அது சர்வதேச அளவில் பரவக் கூடுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்தியாவில் வைரஸின் புரத அமைப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன என்றாலும் இந்தியாவுக்குள் ஏற்கெனவே நுழைந்துவிட்டதா என்றும் உறுதிபடத் தெரியவில்லை. ஆனால், புதிதாக உருவாகியிருக்கும் இந்த வைரஸ் வேற்று வடிவமானது, பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதால் நாம் மேலும் முன்னெச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago