அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வாசல்வரை வந்துவிட்டது. எல்லாக் கணிப்புகளும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடென் முன்னணியில் இருப்பதாகச் சொல்கின்றன. அப்படியே நடந்தாலும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிபராகிவிட முடியும். 2016 தேர்தலில் அப்படித்தான் நடந்தது. அப்போது ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், ட்ரம்பைவிட 30 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார். எனினும் ட்ரம்பே அதிபரானார். இந்த முறையும் அப்படியான சாத்தியங்கள் இருக்கின்றன. இந்த விநோதத்தைப் புரிந்துகொள்ள அமெரிக்கத் தேர்தல் முறையை நெருங்கிப் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த உறுப்பினர்கள் பிரதமரைத் தேர்வுசெய்கிறார்கள். குடியரசுத் தலைவரைத் தெரிவுசெய்வதில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்துகொள்கிறார்கள். ஆனால், அமெரிக்காவில் அதிபரை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படித்தான் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறோம். வாக்குச்சீட்டுகளில் ட்ரம்பின் பெயரும் ஜோ பிடெனின் பெயரும்தான் இருக்கும். இருவரில் ஒருவருக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், அந்த வாக்குகள் அவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை. அது தேர்வர் குழு (Electoral College) என்கிற அமைப்புக்குப் போகிறது. அந்தக் குழுவினர்தான் அதிபரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது என்ன தேர்வர் குழு? யார் அதன் உறுப்பினர்கள்? அவர்கள் எப்படித் தெரிவாகிறார்கள்?
அமெரிக்காவின் கூட்டாட்சி அரசு - அதாவது, மத்திய அரசு - இரண்டு அவைகள் வழி இயங்குகிறது. முதலாவது பிரதிநிதிகள் அவை என்றழைக்கப்படும் கீழவை. இரண்டாவது செனட் என்றழைக்கப்படும் மேலவை.
அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. ஒரு புரிதலுக்காக நம்முடைய ராஜ்ஜிய சபையுடன் ஒப்பிடத்தக்க மேலவைக்கு, இந்த 50 மாநிலங்களிலிருந்தும் தலா இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் இந்தியாபோல மக்கள்தொகை சார்ந்து உத்தர பிரதேசத்துக்கு 18, சிக்கிமுக்கு 1 என்ற சிறிய மாநிலம், பெரிய மாநிலம் வேறுபாடு கிடையாது. ஆக, மேலவைக்கு மொத்தம் 100 உறுப்பினர்கள்.
ஆனால், கீழவையானது இந்தியாவையும் உலகின் பல நாடுகளையும் போல மக்கள்தொகை அடிப்படையில் உறுப்பினர்களைக் கொண்டது. இங்கே மாநிலங்கள் மக்கள்தொகை அடிப்படையில் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு மாவட்டத்துக்கு ஓர் உறுப்பினர் என்று கணக்கு. உதாரணத்துக்கு, கலிபோர்னியா பெரிய மாநிலம். 53 மாவட்டங்கள். ஆக, அதற்கு 53 உறுப்பினர்கள். அலாஸ்கா அளவில் பெரியது என்றாலும், மக்கள்தொகையில் சின்ன மாநிலம். ஒரு மாவட்டம். ஆகவே, ஓர் உறுப்பினர்தான். இப்படி 50 மாநிலங்களுக்குமாகச் சேர்த்து மொத்தம் கீழவையில் 438 உறுப்பினர்கள்.
இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால். கீழவையின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள்தான். ஆனால், மேலவையின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேலவைக்கான தேர்தல் சுழற்சி முறையில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இதுவரை சரிதான். இனிமேல்தான் தேர்வர் குழு வருகிறது. உதாரணமாக, கலிபோர்னியா மாநிலத்தில் 53 கீழவை உறுப்பினர்கள், 2 மேலவை உறுப்பினர்கள் என்று பார்த்தோம். இந்த மாநிலத்தில் இரண்டு கட்சிகளும் தேர்வர் குழுவுக்குத் தலா 55 உறுப்பினர்களை நியமிக்கும். இப்படியாக நாடு முழுக்க இரண்டு கட்சிகளும் தேர்வர் குழுவுக்குத் தலா 538 உறுப்பினர்களை நியமிக்கும். இதிலிருந்து, அதிபர் தேர்தலில் மக்கள் அளிக்கிற வாக்குகளின் அடிப்படையில் 538 உறுப்பினர்கள் தேர்வர் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் குறைந்தபட்சம் 270 உறுப்பினர்களின் ஆதரவு பெறுபவர் அதிபராவார். இதுவரையும் சரிதான்.
இந்தத் தேர்வர் குழுவுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறைதான் விநோதமானது. எடுத்துக்காட்டாக, 2016 தேர்தலில் பென்சில்வேனியா மாநிலத்தில் ட்ரம்ப் 48.2% வாக்குகளும் ஹிலாரி 47.5% வாக்குகளும் பெற்றனர். இந்த மாநிலத்தின் தேர்வர் குழுவில் 20 உறுப்பினர்கள் என்று பார்த்தோம். பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இருவருக்கும் தலா 10 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அது அங்கே விதியன்று.
கூடுதல் வாக்குகள் பெற்றவர் மாநிலத்தின் எல்லா இடங்களையும் பெறுவார். அதுவே விதி. இவ்வாறாகத் தேர்வர் குழுவில் பென்சில்வேனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய 20 உறுப்பினர்களும் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினராக இருந்தனர். இதேபோல டெக்ஸாஸ் மாநிலத்தில் 52% வாக்குகள் பெற்ற ட்ரம்ப் 36 இடங்களையும் அள்ளினார். ஹிலாரி அந்த மாநிலத்தில் பெற்ற 43% வாக்குகள் எந்த மதிப்புமின்றிப் பலனிழந்து போயின. இவ்வாறாகத் தேர்வர் குழுவில் ட்ரம்ப் மொத்தம் 304 இடங்களைப் பெற்றார். ஹிலாரியால் 227 இடங்களையே பெற முடிந்தது. மொத்தத்தில் ஹிலாரி 30 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தபோதும் ட்ரம்ப் அதிபரானது இப்படித்தான்.
இப்படி நடந்தது இது முதல் முறையன்று. சமீப காலத்தில் இது இரண்டாவது முறை. இதற்கு முன் 2000-ல் நடந்தது. அப்போதும் பாதிக்கப்பட்டது ஜனநாயகக் கட்சிதான். அதன் வேட்பாளர் அல் கோர், ஜார்ஜ் புஷ்ஷைவிட 5 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார். எனினும், தேர்வர் குழுவில் 271 இடங்களைப் பெற்ற புஷ் வெற்றியடைந்தார், 266 இடங்களைப் பெற்ற கோர் தோல்வியுற்றார்.
இதற்கு முன்னரும் மூன்று முறை இப்படி நடந்திருக்கிறது (1824, 1876, 1888). இந்தத் தேர்வர் குழு முறை ஜனநாயகத்தையே கேலிக்குள்ளாக்குகிறது என்பதைப் பல அரசியல் விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். எண்ணற்ற விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. எனினும் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை. ஏன்? இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள். ஒன்று, சிறிய மாநிலங்கள் இப்போதைய முறையால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை சீர்திருத்தங்களுக்கு ஒப்புவதில்லை. இன்னொரு காரணம் 50 மாநிலங்களில் சுமார் 40 மாநிலங்கள் ஜனநாயகக் கட்சிக்கோ குடியரசுக் கட்சிக்கோ பாரம்பரியமாக ஆதரவு நல்கிவருவன. எஞ்சிய பத்து, ஊசல் மாநிலங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவற்றில் சில சிறியவை. இவற்றைத் தமக்கு ஆதரவாகத் திருப்பிவிட முடியும் என்று குடியரசுக் கட்சி நம்புகிறது. ஆகவே, புறத்தில் என்ன பேசினாலும், அந்தக் கட்சி சீர்திருத்தங்களுக்கு ஒப்புவதில்லை என்கிறார்கள்.
இன்று நடக்கும் தேர்தலின் முடிவுகள் அஞ்சல் வாக்குகள் காரணமாகத் தாமதமாகத்தான் வெளியாகும். புதிய அதிபர் பதவியேற்கக் குறிக்கப்பட்டிருக்கும் நாள்: ஜனவரி 20. எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் அடுத்த அதிபர் தேர்தலுக்கு முன்னதாகத் தேர்வர் குழு முறையை மாற்றியமைப்பது அமெரிக்காவுக்கு நன்மை பயக்கும்.
- மு.இராமனாதன்,
ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago