தமிழ்நாட்டில் வருமானமின்றி அன்றாட பூஜைக்கே திணறும் கிராமப்புறத் திருக்கோயில்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. கோயில் அர்ச்சகர்களும் பணியாளர்களும் மிக மிகக் குறைந்த ஊதியத்திலோ அல்லது ஊதியம் இல்லாமலோ பணியாற்றிவருகின்றனர். இந்தக் கோயில்களுக்கு வருமானங்களை உருவாக்குவதன் மூலம், இரண்டு கால பூஜைகளையாவது நடத்துவதற்கு ஏற்பாடுசெய்யலாம். தமிழ்நாடு முழுவதும் போதிய வருமானம் இல்லாத கோயில்கள் பற்றிய விவரங்களைச் சேகரித்து, அந்தப் பட்டியலைப் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். விருப்பமுள்ள கொடையாளர்கள் குறிப்பிட்ட கோயில்களுக்கு அளிக்கும் நன்கொடைகளைத் திரட்டி அதைத் தேசிய வங்கியொன்றில் நிரந்தர வைப்புநிதியாகப் பராமரிக்கலாம். சிறப்பாக இத்திட்டத்தை நிறைவேற்றினால் ஒவ்வொரு கோயிலுக்கும் குறைந்தபட்சம் ரூ.2 கோடி வரையிலும் மிக எளிதாக நிதி திரட்ட முடியும். இத்திட்டத்தின்படி நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்குக் கோயில் பூஜைகளின்போது முன்னுரிமை கொடுக்கலாம். கும்பாபிஷேகத்தின்போது அவர்களைக் கௌரவப்படுத்தலாம். அவரது குடும்பத்தினருக்கும் வழிவழியாக இந்த மரியாதையைத் தொடரலாம். அதைச் செய்ய அரசுக்கும் அறநிலையத் துறைக்கும் மனமில்லையெனில், கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் ரூ.2 கோடி அளவுக்குப் பொது ஏலம் மூலமாக விற்பனை செய்து, அத்தொகையை வங்கிக் கணக்கில் பாதுகாக்கலாம். அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையில் இரு கால பூஜைக்கான செலவுகள், வஸ்திரச் செலவு, அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கான ஊதியம் போன்றவற்றை அளிக்கலாம். இயன்றவரை நன்கொடை திரட்டி, எஞ்சிய மீதித் தொகைக்கு நில விற்பனை குறித்தும் யோசிக்கலாம். இது கடுமையான யோசனையாக இருக்கலாம். ஆனால், மிகப் பெரும் அளவில் சொத்துகள் இருந்தும் வருமானம் இல்லை என்ற காரணத்தைக் காட்டி கோயில்கள் இருண்டுகிடப்பதைக் காணச் சகிக்கவில்லை.
- வெ.சண்முகம், துணை ஆட்சியர் (ஓய்வு), திருப்பூர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago