உலக வரலாற்றில் ஆப்பிளுக்குத் தனி இடம் இருக்கிறது. புவியீர்ப்பு விசை இருப்பதை நியூட்டன் கண்டறிந்த கதையோடு தொடர்புள்ள ஆப்பிள் அநேகமாக இப்போது பழங்கதை; இந்தத் தலைமுறையினருக்கு இன்று உலகின் மிகப் பெரிய 10 தொழில் நிறுவனங்களுள் ஒன்றாக உருவெடுத்திருக்கும் ‘ஆப்பிள்’ கதையே விருப்பக் கதை. ஆப்பிள் நிறுவனத்தின் கதையைப் பெரும்பாலானோர் அதை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸோடு பொருத்திப் பேசுவதே முன்பெல்லாம் வழக்கம். ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸைத் தாண்டியும் அதன் வரலாறு தொடரக் காரணமான டிம் குக்கும் பேசப்படுவது இப்போது ஆரம்பித்திருக்கிறது. வெளிநாடுகளில் நிறுவனங்களை எப்படிக் கலாச்சாரரீதியாக வளர்த்தெடுக்க ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள ஆளுமையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதற்கு டிம் குக் கதை நமக்குச் சொல்கிறது.
நவம்பர் 1, அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் உள்ள ராபர்ட்ஸ்டேல் நகரில் பிறந்தவர் டிமோத்தி டி. குக் எனும் டிம் குக். 1982-ல் அவ்பர்ன் பல்கலைக்கழகத்திலிருந்து தொழிலகப் பொறியியலில் பட்டம் பெற்ற டிம் குக், வடக்கு கரோலினா மாநிலத்தின் துர்ஹாம் பல்கலைக்கழகத்திலிருந்து வணிக நிர்வாகத்துக்கான பட்டத்தை 1988-ல் பெற்றார். கணிப்பொறி தயாரிக்கும் நிறுவனமான ஐ.பி.எம்-ல் 1982-லிருந்து 1994 வரை பணிபுரிந்தார். அதன் பின்பு இன்டெலிஜென்ட் எலெக்ட்ரானிக்ஸ், காம்பாக் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்களில் வேலைபார்த்துவிட்டு, 1998-ல் ஆப்பிள் நிறுவனத்தில் டிம் குக் வேலைக்குச் சேர்கிறார். ஆப்பிளின் உலகளாவிய செயல்பாடுகளுக்கான மூத்த துணைத் தலைவர் பொறுப்பு அங்கே வழங்கப்படுகிறது. ஆப்பிள் பொருட்களை அந்த நிறுவனமே தயாரித்துக்கொண்டிருந்த நிலையில், அவற்றை அயல் தொழிற்சாலைகளிடம் ஒப்பந்த முறையில் ஒப்படைத்த பெருமை டிம் குக்கையே சேரும்.
2011-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு டிம் குக்கை ஆப்பிளின் தலைமைச் செயல் அதிகாரியாக அவர் நியமித்தார். அதற்கும் முன்பே 2004, 2009-ம் ஆண்டுகளின் ஸ்டீவ் ஜாப்ஸ் தனக்கு வந்திருந்த கணையப் புற்றுநோய்க்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள விடுப்பு எடுத்துச் சென்றபோது இடைக்காலத் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட அனுபவம் டிம் குக்குக்கு இருந்தது. ஆகவே, வெகு முன்பாகவே டிம் குக்கின் தலைமைப் பண்பை ஸ்டீவ் ஜாப்ஸ் கண்டறிந்திருக்கிறார். மாக்கின்டோஷ், ஐஃபோன், ஐபேட், ஐபாட் என்று உலகத்தையே தன் வசப்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தபோது, அவரது ஆப்பிள் நிறுவனம் அவ்வளவுதான் என்று பலரும் கவலை அடைந்தார்கள்; போட்டி நிறுவனங்களுக்கு உள்ளூர குதூகலம். ‘நீங்கள் நினைத்ததுபோல் நடக்காது’ என்று உள்ளுக்குள் டிம் குக் அப்போது சிரித்திருக்கலாம். ஆம்! ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த ஆண்டு ஆப்பிளின் சந்தை மதிப்பு 348 பில்லியன் டாலராக இருந்தது; இப்போது அதன் சந்தை மதிப்பு 1.9 ட்ரில்லியன் டாலர். இரண்டு மடங்குக்கும் மேலே அதிகம்.
இத்தனைக்கும் ஸ்டீவ் ஜாப்ஸைப் போல அறிவியலாளரோ புத்தாக்க வல்லுநரோ இல்லை டிம் குக். ஆனால், தன் பலத்தையும் எல்லைகளையும் அறிந்தவர் டிம் குக். புதிய தயாரிப்புகளில் ஆர்வம் காட்டுவதைவிட ஏற்கெனவே இருக்கும் தயாரிப்புகளில் சிறுசிறு முக்கியமான மாற்றங்கள் செய்வதிலேயே அவருக்கு ஆர்வம் அதிகம். ஸ்டீவ் ஜாப்ஸ் கிட்டத்தட்ட தினமும் தனது தயாரிப்புகளின் வடிவமைப்பாளர்களையும் புத்தாக்கக் குழுவினரையும் சந்திப்பார் என்றால், டிம் குக் அவர்களை அரிதாகவே சந்தித்திருக்கிறார். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும்போது அந்நிகழ்வுகள் பெரிய ஹோட்டல்களில் நடக்கும்; ஸ்டீவ் ஜாப்ஸே அந்தத் தயாரிப்புகளைப் பற்றி விளக்கி, அறிமுகப்படுத்திவைப்பார். டிம் குக் இதுபோன்ற நிகழ்வுகளில் ஆர்வம் காட்டியதில்லை. அவற்றையெல்லாம் உரியவர்கள் கையில் ஒப்படைத்துவிடுவார்.
டிம் குக் ஒரு ராஜதந்திரி. அவர் அரசியலில் இருந்திருந்தால் வெளியுறவுச் செயலராகவோ வெளியுறவு அமைச்சராகவோ ஆகியிருப்பார் என்கிறார்கள். தன் நிறுவனத்தின் அரசியல் செயல்பாடுகள், சந்தைப்படுத்துதல், சர்வதேச உறவுகள் ஆகியவற்றில் டிம் குக் அதிகக் கவனம் செலுத்தினார். முக்கியமாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தக உறவுகள் மோசமாக இருந்தபோதும் அதனால் ஏற்பட்ட நெருக்கடிகள் ஆப்பிள் நிறுவனத்தைப் பாதிக்காதவாறு அரசியல் வட்டாரங்களில் டிம் குக் செல்வாக்கு செலுத்தினார். ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருந்தபோதே 2000 வாக்கில் ஆப்பிள் செல்பேசி உற்பத்தித் தொழிற்சாலைகளை சீனாவில் தொடங்கியதிலும் ஆப்பிள் தயாரிப்புகளை சீன மக்களை வாங்கச் செய்ததிலும் டிம் குக்குக்கு முக்கியப் பங்கிருக்கிறது.
ஒரு வெற்றிகரமான நிறுவனத்தின் நிறுவனர் இறந்த பிறகோ, அவர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகோ அந்த நிறுவனம் தடுமாறுவதற்குப் பல உதாரணங்கள் நம்மிடம் உள்ளன. ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து பில் கேட்ஸ் விலகிய பிறகு அந்த நிறுவனம் முன்பு தொட்ட உச்சத்தை மறுபடி தொடவே இல்லை. இந்தியாவில்கூட ‘இன்ஃபோஸிஸ்’ நிறுவனத்தை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், ஆப்பிளுக்கு அந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டதற்குக் காரணம், வேலையிலேயே குறியாக இருக்கும் டிம் குக்தான் என்கிறார்கள். தனிப்பட்ட வாழ்வின் அடிப்படையில் டிம் குக்கை எப்படி மதிப்பிடுவது என்பது குழப்பமான விஷயம்தான். ஒவ்வொரு நாளும் 4 மணிக்குக் கண்விழிக்கும் டிம் குக் செய்யும் முதல் காரியம் என்ன தெரியுமா? உலக அளவில் ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதுதான். இப்படித்தான் அவருக்கென்று தனிப்பட்ட வாழ்க்கையே கிட்டத்தட்ட இல்லாமல் போயிருக்கிறது; அவரது நாட்காட்டியில் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டிருக்காது என்கிறார்கள் ஆப்பிள் குழுவினர்.
எப்போதாவது ஒரு ஹோட்டலுக்குப் போய் தனியாக உட்கார்ந்து தனக்குப் பிடித்த உணவை வரவழைத்து உண்பது, தானே டிக்கெட் எடுத்து விளையாட்டுப் போட்டிகளைச் சென்று காண்பது என்று ஒரு தனிமனிதராகவே அவர் வாழ்ந்துவருகிறார். திருமணம் செய்துகொள்ளாத டிம் குக் தன்னை ஒரு தன்பாலின உறவாளராக அறிவித்துக்கொண்டவர். நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்னவாகும் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் 2014-ல் இந்த அறிவிப்பை வெளியிட்டார். உலகின் பெரிய நிறுவனங்களுள் ஒன்றின் தலைமைப் பதவியில் இருப்பவர் தன்பாலின உறவாளர் என்று அறிவித்துக்கொண்டது அதுதான் முதல் முறை. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் தன்பாலின உறவாளர்களுக்கு இது பெரும் ஊக்கமாக அமைந்தது. கூடவே, நிறுவனத்தின் உயர் பொறுப்பில் பெண்கள், கறுப்பினத்தவர் போன்றோரின் பங்களிப்பை டிக் குக் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஸ்டீவ் ஜாப்ஸின் யுகம் புத்தாக்கங்களின் யுகம் என்றால் டிக் குக்கின் யுகம் அவற்றைக் கட்டிக்காத்து அதன் மூலம் நிறுவனத்தை இன்னும் மேலே மேலே கொண்டுசெல்லும் யுகம். இன்னும் ஜாப்ஸுடன் பல வகைகளில் குக்கை ஒப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். பணிச்சூழலைப் பல வகைகளில் சகஜமாக்கியவர் குக் என்றே பலரும் குறிப்பிடுகிறார்கள். இருந்தாலும் குக் என்றாலே பலரும் நடுநடுங்கிவிடுவார்கள். அதற்குக் காரணம், வேலை என்று வந்துவிட்டால் அவர் துல்லியமாகவும், விவரங்களுக்கு முக்கியத்துவம் தருபவராகவும் இருப்பதுதான். ‘இன்றைக்கு எவ்வளவு அலகுகள் உற்பத்தி செய்திருக்கிறோம்?’ என்று அவர் கேட்டால் ‘இருபதாயிரம், முப்பதாயிரம்’ என்று அவரது ஊழியர்கள் சொல்வார்கள். ‘நமது இலக்கில் இது எத்தனை சதவீதம்?’ என்று கேட்பார். ‘98%’ என்று சொன்னால் அத்துடன் விட மாட்டாராம், ‘2% வீழ்ச்சிக்கான காரணத்தைச் சொல்லுங்கள்’ என்று பிடித்துக்கொள்வாராம். அவருடன் பேசும்போது யாராவது சற்றுத் தடுமாறினாலும் ‘அடுத்தவர்?’ என்று அடுத்தவரிடம் போய்விடுவாராம். அவர் நடத்தும் கூட்டங்களில் அழுதுகொண்டே வெளியேறியவர்கள் பலர். பெரும்பாலும் கணினி வழியாகவும், அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்கள் வழியாகவுமே நிர்வாகத்தை மேற்கொள்ளும் டிம் குக்கை அவருக்கு அடுத்த நிலையிலுள்ள அதிகாரிகள்கூட மிகக் குறைவாகவே சந்தித்திருக்கிறார்கள்.
டிம் குக் பொறுப்பேற்ற பிறகு ஆப்பிள் நிறுவனம் தனது சமூகக் கடப்பாடுகளை அதிகரித்துக்கொண்டதாகக் கூறிக்கொண்டாலும் அதன் மேல் விமர்சனங்கள் எழாமல் இல்லை. அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் தொழிற்சாலைகளுடன் ஒப்பிடும்போது சீனாவில் உள்ள பணிச்சூழல் மோசமாக உள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. எந்த நாட்டில் தாங்கள் செயல்படுகிறோமோ அந்த நாட்டின் விதிமுறைகளுக்கு உட்பட்டே தாங்கள் செயல்படுவதாக ஆப்பிள் இதற்குக் கூறிய மழுப்பலான பதிலை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். டிம் குக்கின் ஆப்பிளுக்கு மேலும் கூடுதலாக மனிதத்துவ முகம் வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள். அதைச் செய்தால் ஆப்பிளுக்கு இதயத்தின் சாயலும் கிடைக்கும்!
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago