கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், போரூரில் உள்ளராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக, கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், “முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும்.அவற்றையும் மீறி சுகம் கெட்டால்,நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்று தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என் நலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘மருத்துவமனைவாசம் முடித்து இன்று பணிக்கு திரும்பினேன். எனக்கு சிகிச்சை அளித்த ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவர் மூர்த்தி தலைமையிலான மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும், என் மகள்களுக்கும், என் அணியினருக்கும், தம்பி மகேந்திரனுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நான் விரைந்து நலம் பெற வேண்டும் என வாழ்த்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் என் நன்றிகள். நான் விரைந்துகுணம் அடைய வேண்டுமென பிரார்த்தனையில் ஈடுபட்ட ரசிகர்கள், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago