ஒரு கதையில் வரும் முதன்மை கதாபாத்திரமோ, கதாபாத்திரங்களோ, ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை, திரும்பத் திரும்ப எதிர்கொள்வதைக் குறிப்பது ‘டைம் லூப்’(Time loop) எனும் ‘கால வளையம்’. இவ்வாறு நிகழும்போது, கதாபாத்திரம் தன் முயற்சியால் அந்த நாளின் எந்தவொரு செயலையும் மாற்றி, அதில் வெற்றிபெற முடியும். இதை அடிப்படையாக கொண்ட திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’.
நண்பன் திருமணத்துக்காக துபாயில் இருந்து டெல்லி வழியாக கோவை வருகிறார் சிம்பு. விமானம் உஜ்ஜைன் நகரின் மீது பறக்கும்போது, ‘டைம் லூப்’ உணர்வுக்குள் ஆட்படுகிறார். அன்று, கோவையில் ஆளுங்கட்சி அரசியல் மாநாடு நடக்கிறது. அதில் கலந்துகொண்ட மாநில முதல்வர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த சதியில் ஈடுபடுவது யார், அவர்களது நோக்கம் என்ன என்பதை அறிந்து, அதை நாயகன் எப்படி முறியடிக்கிறார் என்பது கதை.
நாயகன் வழியாக வில்லனுக்கும் டைம் லூப் விளைவு தொற்றிக்கொண்டு, இருவருக்குமான ஆடுபுலி ஆட்டமாக சுவாரஸ்யமான ட்ரீமென்ட்டை திரைக்கதைக்கு தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. அதில், வாரிசு அரசியல் திணிப்பு, சிறுபான்மை மதத்தவரை தீவிரவாதி என முத்திரை குத்துவது, விமானநிலையக் கூரை இடிவது, கட்சி பேனர் விழுந்து சாலையில் செல்வோர் உயிரிழப்பது என பல அரசியல் நிகழ்வுகளை கச்சிதமாக பொருத்தியிருப்பது நேர்த்தி.
வந்த காட்சிகளே திரும்பத் திரும்ப வந்து அலுப்பை ஏற்படுத்தக்கூடிய கதைக்களத்தை, கே.எல்.பிரவீன் தனது ‘கூர்மை’யான எடிட்டிங் மூலம் தூக்கி நிறுத்துகிறார். ‘ரிப்பீட்’ காட்சிகளின் கோணங்களை அதிரடியாக மாற்றிக் காட்டி, தனதுஇருப்பை பதிவு செய்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன். கதை நகர்வுக்கேற்ற பின்னணி இசையை வழங்குகிறார் யுவன்.
வில்லன் கூட்டத்தின் சதியை முறியடிக்கவும், நண்பர்களைக் காப்பாற்றவும் செத்து செத்து மீண்டும் வந்து கெத்து காட்டும் துடிப்பான நடிப்பைத் தந்து, அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் அடக்கிவாசிக்கிறார் சிம்பு. காவல் அதிகாரி தனுஷ்கோடியாக வரும் எஸ்.ஜே.சூர்யா, மிகை நடிப்பால் மிரட்டுகிறார். மூத்த அரசியல்வாதியாக வரும் ஒய்.ஜி.மகேந்திரன் எதிர்மறை நடிப்பில் வெளுத்துவாங்குகிறார். கல்யாணி ப்ரியதர்ஷன்,கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோரை தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்தியுள்ளனர்.
சிம்புவுக்கான சில ‘பில்ட் அப்’ காட்சிகள், சில வசனங்களின் தேவையற்ற பிரயோகம், நாயகனின் ‘டைம் லூப்’ விளைவு வில்லனுக்கு தொற்றிக்கொள்வதற்கான லாஜிக்கை வலுவாக அமைக்காதது போன்றவை இயக்குநரை ‘சமாளிப்புத் திலகம்’ ஆக காட்டுகின்றன. இருப்பினும் அரசியல் பின்னணியை ‘டைம் லூப்’கதைக்குள் பொருத்தி, நாயகனைவிடவும் வலுவாக வில்லன் கதாபாத்திரத்தை படைத்ததால், கடைசி காட்சிவரை களைகட்டுகிறது இந்த ‘மாநாடு’.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago