தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 11-வது கட்ட முகாமில் - 12 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற11-ம் கட்ட மெகா முகாம் மூலம் 12 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, வாரந்தோறும் 2 நாட்களுக்கு (வியாழன்,ஞாயிறுகளில்) தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, தமிழகத்தில் 11-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று சில இடங்களில் மழை பெய்தது. அந்த சமயத்தில்,மக்கள் வருகை சற்று குறைவாகஇருந்தது. மதியத்துக்குப் பிறகுஓரளவுக்கு மக்கள் வந்து ஆர்வத்துடன் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

இதுதொடர்பாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி பணிகள் நேற்றும் நடைபெற்றன. 18 வயதுக்குமேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை நடைபெற்ற 10 மெகா தடுப்பூசி முகாம்களில் 1 கோடியே 94லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.

வடகிழக்குப் பருவ மழை காரணமாக 18 மாவட்டங்களில் மழை பெய்த போதிலும், நேற்று நடைபெற்ற 11-வது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 12 லட்சத்து ஆயிரத்து 832 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் முதல் தவணையாக 4,52,969 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணையாக 7,48,863 பயனாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 77.02 சதவீதம் முதல் தவணையாகவும் 41.60 சதவீதம் இரண்டாம் தவணையாகவும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதியதாக 739 பேருக்கு கரோனா

இதற்கிடையே, தமிழகத்தில் நேற்று புதியதாக 739 பேர் கரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், ஆண்கள் 435, பெண்கள் 304 பேர் ஆவார்கள். அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 112, சென்னையில் 107 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று மட்டும் 17 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 432 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 28 லட்சத்து 32 ஆயிரத்து 931 பேருக்கு பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும்1 லட்சத்து ஆயிரத்து 738 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்