உகாண்டா பாரா பாட்மிண்டனில் - பதக்கம் வென்ற தமிழக வீரர்களை நேரில் அழைத்து முதல்வர் வாழ்த்து : அனைத்து வசதிகளும் செய்து தருவதாக உறுதி

By செய்திப்பிரிவு

உகாண்டாவில் நடைபெற்ற பாரா பாட்மிண்டன் போட்டிகளில் 12 பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 9 வீரர்களை நேரில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

12 பதக்கங்கள் வென்று சாதனை

சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டி இம்மாதம் உகாண்டாவில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் 45 பதக்கங்களை வென்றனர். இதில் தமிழக வீரர்கள் மட்டும் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ருத்திக், தினகரன், சிவராஜன், கரன், அமுதா, சந்தியா, பிரேம்குமார், சீனிவாசன் நீரஜ் மற்றும் போட்டியில் பங்கேற்ற தினேஷ், பயிற்சியாளர்கள் பத்ரிநாராயணன், இர்பான் ஆகியோர்நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துவாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், செயலர் அபூர்வா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் இரா.ஆனந்த்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியதாவது:

அச்சமின்றி போட்டியில் பங்கேற்பு

உகாண்டாவின் கம்பாலா நகரில் உலக தரவரிசைக்கான பாரா பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றது. தமிழகம் சார்பில்பங்கேற்ற வீரர்கள் 12 பதக்கங்கள் வென்றுள்ளனர். விளையாட்டு வீரர்களை முதல்வர் இன்று சந்தித்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

உகாண்டாவில் போட்டிகள்நடைபெற்ற மைதானத்தின் அருகில் இவர்கள் தங்கியிருந்த பகுதியில் 200 மீட்டர்களில் வெடிகுண்டு வெடித்தது. இருப்பினும் அச்சமின்றி போட்டியில் பங்கேற்றனர்.

முதல்வர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக இவர்கள் தங்கியிருந்த ஓட்டல் உகாண்டா ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. உகாண்டாவில் உள்ள தமிழ்ச்சங்கம் இவர்களைப் பாதுகாத்து, அனைத்துஉதவிகளையும் வழங்கியுள்ளதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்