நோய் எதிர்ப்பு சக்தி, உடல் வலிமையின் அவசியத்தை கரோனா உணர்த்தியுள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெற்றோர் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளனர். அதேபோன்று உடலுக்கு வலிமையையும், உற்சாகத்தையும் தரும் சிலம்பம் போன்ற தற்காப்புக் கலையைக் கற்பதில் சிறுவர், சிறுமியர் ஆர்வம்காட்டுகின்றனர்.
கரோனா எனும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ், மக்களின் வாழ்க்கை முறையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. பீட்சா, பர்கர் போன்றவற்றை நாடியவர்கள் இப்போது நோய் எதிர்ப்பு சக்திக்காக காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை உண்ணத் தொடங்கியுள்ளனர். அதேபோல், உடல் வலிமையை அதிகரிக்க, தங்களது குழந்தைகளை சிலம்பம், குங்பூ, ஜிம்னாஸ்டிக் போன்ற தற்காப்புக் கலையைக் கற்றுக் கொள்ள பெற்றோர் ஊக்கப்படுத்துகின்றனர்.
இதற்கிடையே, சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் 50-க்கும்மேற்பட்ட சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், இளம் பெண்கள் ஆர்வமாக சிலம்பம் கற்று வருகின்றனர்.
இதுகுறித்து வெங்கடேஷன் என்பவர் கூறியதாவது:
நடைப்பயற்சிக்காக அண்ணாநகர் டவர் பூங்காவுக்கு நான் தினமும் வருவேன். அப்போது சிறுவர்கள் சிலம்பம் கற்றுக் கொள்வதைப் பார்த்தேன். என் குழந்தைகளுக்கும் இந்த பாரம்பரிய வீரவிளையாட்டைக் கற்றுக் கொடுக்க விரும்பினேன்.
அதையடுத்து எனது மகன் ஹேமவந்த்(7), எனது தங்கை மகன் ஜெய்கிரிஷ்(11) ஆகியோரை சிலம்பம் கற்க அனுப்பினோம். காலை 6.15 மணிக்கெல்லாம் பூங்காவுக்கு வந்து விடுவார்கள். காலை 7.30 மணிவரை சிலம்பம், குங்பூ, ஜிம்னாஸ்டிக் கற்றுக் கொள்கிறார்கள். சிலம்பத்துக்கு இங்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இருவரும் காலையில் முறையாகப் பயிற்சி எடுத்துக் கொண்டாலும், மாலையில் வீட்டு மொட்டை மாடியில் சிலம்பம் ஆடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் யூனியன் உறுப்பினரும், எஸ்பிகே ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனரும், சிலம்பம் மாஸ்டருமான ராஜா கூறியதாவது:
நான், எனது மகன்கள் 2 பேர் திரைப்படத் துறையில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக உள்ளோம். உடல் வலிமை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறோம். தற்போதைய தலைமுறையினர் படிப்பு, வேலை, சம்பாத்தியம், வீடு, திருமணம், குழந்தை இவைதான்வாழ்க்கை என்று நினைக்கின்றனர்.
தங்களது உடல் ஆரோக்கியம், உடல் வலிமை பற்றி ஒருபோதும் கவலைப்படுவதே இல்லை. அதனால் பலரும் உடல் பருமனுடன் காணப்படுகின்றனர். திருமணம் நிச்சயமானதும் தங்களது உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று இளைஞர்களும், இளம் பெண்களும் எங்களை நாடுகின்றனர். நாங்களும் அதற்குரிய ஃபிட்னஸ் பயிற்சி அளிக்கிறோம்.
ஆனால், ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பார்கள். அதுபோல சிறிய வயதில் இருந்தேஉடலை வலிமையாக வைத்துக் கொண்டால்தான் உடல் பருமன் போன்ற பிரச்சினைகள், நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். கரோனா பாதிப்பால் பெரும்பாலான மக்கள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தாக வேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.
அதேபோல், உடல் வலிமையும் அவசியம் என்று உணர்ந்ததால், சிலம்பம் போன்ற தற்காப்பு கலையைக் கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக சிறுவர், சிறுமியரிடம் தற்போது ஆர்வம் அதிகரித்துள்ளது. 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கு சிலம்பம், குங்பூ, ஜிம்னாஸ்டிக், கிக் பாக்ஸிங், ஊசூ, ஃபிட்னஸ் உட்பட 7 வகையான பயிற்சி அளிக்கிறோம்.
சீருடை, சிலம்பத்துக்கான கம்பு, விளையாட்டு உபகரணங்களுக்கு மட்டுமே பணம் வாங்குகிறோம். மற்ற விளையாட்டுகளைக் கற்றுக் கொள்வதற்கு முன்பு முதலில் சிலம்பம் கற்றுத் தருகிறோம். பின்னர் அவர்கள் விரும்பும் மற்ற விளையாட்டுகளில் பயிற்சி பெற வழிகாட்டுகிறோம்.
சிலம்பம், ஊசூ விளையாட்டில் சிறப்பிடம் பெற்றால், உயர்கல்வியில் சேர்வதற்கும், வேலைவாய்ப்புக்கும் மிகப்பெரிய வாய்ப்புள்ளது. இதற்கென மத்திய, மாநில அரசுகள், அரசுப் பணிகளில் குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்கியிருப்பதால், இந்த விளையாட்டுகளைக் கற்பதில் இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago