10-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு - பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவது அவசியம் : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

10-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும்அதிகரித்து வருவதால், அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னையில் உள்ள நொச்சிக்குப்பம், பெசன்ட் நகர் ஊரூர் குப்பம்,கொட்டிவாக்கம் குப்பம் மற்றும் நீலாங்கரை குப்பம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குச் சென்று கரோனா தடுப்பூசி போடும் பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தென்சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், த.வேலு,ஜே.எம்.எச்.அசன் மௌலானா ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் வகையில் பல்வேறு நிலைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நல்லாமூர் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களில் வீடு தேடிநடமாடும் வாகனங்கள் மூலம் கரோனா தடுப்பூசி போடும் பணிதொடங்கப்பட்டது. இத்திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை கோவாக்சின் தடுப்பூசி 2-வது தவணையை 14,07,903 நபர்களும், கோவிஷீல்டு 2-வது தவணையை 51,60,392 நபர்களும் என மொத்தம் 65,70,295 நபர்கள் போட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் யாருக்கெல்லாம் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டும் என பட்டியலை தயார் செய்திருக்கிறார்கள். அந்த பட்டியலை வைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வாக்காளர் பெயர் பட்டியலில் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.

உலகம் முழுவதிலும் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் நாம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் வீடுகள்தோறும் சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. வரும் 14-ம்தேதி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 8-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், சேலத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவ கலந்தாய்வில் வன்னியர் உள்ஒதுக்கீடு பின்பற்றப்படுவது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முடிவெடுத்து மருத்துவ மாணவர்சேர்க்கை கலந்தாய்வு தொடங்கப் படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்