தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் மையங்களில் நடந்த - 2-ம் கட்ட சிறப்பு முகாமில் 16 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி : சென்னையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட சிறப்பு முகாம் மூலம் 16.02 லட்சம் பேருக்குகரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னையில் தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் கடந்த12-ம் தேதி 40 ஆயிரம் மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்புமுகாம்கள் நடத்தப்பட்டன. ஒரே நாளில் 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. குறிப்பாக, கேரளாவை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களில் அதிக அளவில்முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

அக்டோபர் 31-ம் தேதிக்குள் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்ததமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக, வாரம் ஒருமுறை இதுபோன்ற சிறப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும்2-ம் கட்ட சிறப்பு முகாம் நேற்றுநடத்தப்பட்டது. ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி, சத்துணவுமையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்கள் என 20 ஆயிரம் மையங்களில் இந்த முகாம் நடந்தது. இதற்காக முன்கூட்டியே 17 லட்சம் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.

தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் ஆர்வம்

காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை நடந்த முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

சென்னை சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கலில் நடந்த முகாம்களை முதல்வர் ஸ்டாலின் ஆய்வுசெய்தார். அங்கு இருந்த மக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து கேட்டறிந்தார். அப்போது, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய், நிதி) விஷு மகாஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முகாம்களை ஆய்வு செய்தார். பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையம், தேனாம்பேட்டை நகர்ப்புற ஆரம்பசுகாதார நிலையம், அடையாறு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த தடுப்பூசி முகாமைதலைமைச் செயலர் இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த முகாமை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் நடந்த முகாமை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். டீன்தேரணிராஜன் உடன் இருந்தார்.

அந்தந்த மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்களை அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆய்வுசெய்தனர்.

நேற்று நடந்த 2-ம்கட்ட சிறப்பு முகாமில் 16 லட்சத்து 2 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE