அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் - 24 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

By செய்திப்பிரிவு

அனைத்து சாதியினரும் அர்ச்சக ராகலாம் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதாரர் களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி அண்மையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கோயில் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைவழங்கும் நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத் தில் நேற்று நடந்தது.

இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்றுதேர்வு செய்யப்பட்ட அனைத்து சாதிகளை சார்ந்த 24 அர்ச்சகர்கள், இதர பாடசாலையில் பயிற்சி பெற்ற34 அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள், 20 ஓதுவார்கள், 17 பரிசாரகர், நெய்வேத்யம், சுயம்பாகம்,கருணை அடிப்படையில் 12 பேர்உட்பட 208 பேருக்கு பணி நியமனஆணைகளை வழங்கினார். மேலும், உயிரிழந்த 3 பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.7 லட்சத்துக்கான குடும்ப நலநிதியும், 5 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது:

கடவுள் ஏற்றுக்கொள்ளும் வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். தமிழகத்தில் அனைத்து பணிகளும் செம்மையாக, சிறப்பாக நடந்து வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்ஆகலாம் என்பது அப்பர் பெருமான், ராமானுஜர் ஆகியோரின் எண்ணம். அதை முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி கண்ட கனவு இன்று நனவாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலினை நெஞ்சார வாழ்த்துகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்‌.

இந்நிகழ்ச்சியில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனகர்த்தர் குமரகுருபர சுவாமிகள், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முதல் பெண் ஓதுவார்

தமிழகத்தில் முதன்முறையாக சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு ஓதுவாராக சு.சுஹாஞ்சனா (28) என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சுஹாஞ்சனா கூறும்போது, ‘‘கரூரில் உள்ள அரசு இசைப் பள்ளியில் படித்தேன். பொதுவாக ஓதுவார் பணியை ஆண்கள்தான் மேற்கொண்டு வந்தனர். படிக்கும்போது எனக்கு ஓதுவார் பணி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. தேவாரம், திருவாசகத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம் என்று நினைத்துதான் படித்தேன். வாய்ப்பு கிடைத்தால் இறைவன் முன்பு பாட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. தற்போது, ஓதுவார் பணி கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்