அரசு அதிகாரிகளை தேவையில்லாமல் வரவழைத்து - நீதிபதிகள் பேரரசரை போல நடந்து கொள்ளக்கூடாது : உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை

By ஆர்.பாலசரவணக்குமார்

அரசு அதிகாரிகளை தேவையில்லாமல் நீதிமன்றத்துக்கு வரவழைத்து, வெகுநேரம் காக்க வைத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பேரரசர்களைப் போல நடந்து கொள்ளக்கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

அலகாபாத் உயர் நீதிமன்றம், ஒரு வழக்கு விசாரணைக்கு அம்மாநில சுகாதாரத் துறைச் செயலர்நீதிமன்றத்தில் ஆஜராக நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு இருந்தது. அதை எதிர்த்து மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களதுஉத்தரவி்ல், ‘‘உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கான அதிகாரஎல்லை என்ன என்பதை உணர்ந்துசெயல்பட வேண்டும். ஒருபோதும்தங்களின் எல்லையைத் தாண்டக்கூடாது. தேவையில்லாமல் அரசு அதிகாரிகளை நீதிமன்றத்துக்கு வரவழைத்து, அவர்களை வெகுநேரம் காக்க வைத்து நீதிபதிகள் பேரரசர்கள் போல நடந்து கொள்ளக்கூடாது. இதன்மூலம் அந்த அதிகாரிகளின் பணிச்சுமை அதிகரிக்கும்.

நீதிபதிகள் தங்களுக்கான அதிகார வரம்பை மீறி, நிர்வாகத்தின் முக்கிய தூணாக விளங்கும் அதிகாரிகளை நீதிமன்றத்துக்கு அழைக்கக்கூடாது. நீதிமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.ஒருசில உயர் நீதிமன்றங்களில் அதிகாரிகளை அடிக்கடி நீதிமன்றத்துக்கு அழைத்து அவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுத்தம் கொடுத்து அதன்மூலம்நீதிமன்றத்தின் விருப்பங்களையும், கற்பனைகளையும் நிறைவேற்றும் வகையில் உத்தரவுகளை பிறப்பிப்பது வாடிக்கையாகி விட்டது.

அரசு அதிகாரிகள், நிர்வாகத்தின் முக்கிய அங்கம். அவர்கள் தங்களது கடமையைச் செய்கிறார்கள். அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் அல்லது முடிவுகள் அவர்களி்ன் சொந்த நலன் சார்ந்ததுஅல்ல. மாறாக பொதுநிதியின் பாதுகாவலராக விளங்கும் அதிகாரிகள் நிர்வாக நலன் கருதியே சில முக்கிய முடிவுகளையும், உத்தரவுகளையும் பிறப்பிக்கின்றனர். அந்த முடிவுகளை நீதித்துறையின் மறுஆய்வுக்கு உட்படுத்தாமல் அங்கீகரிப்பதும், இல்லைரத்து செய்வதும் நீதிமன்றத்தின் அன்றாட பணி என்றாலும் அதிகாரிகளை அடிக்கடி அழைப்பது என்பது பாராட்டுக்குரியது அல்ல.

நீதிபதிகள் தங்களது வரம்பு என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். ஒருஉயர் பொறுப்பில் உள்ள அதிகாரியை நீதிமன்றத்துக்கு வரவழைப்பதன் மூலம் நீதிமன்றத்தின் கவுரவமும், கம்பீரமும் அதிகரித்துவிடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதிகாரியை தேவையின்றி அழைப்பது என்பதுபொது நலனுக்கு எதிரானது. அதற்குப்பதிலாக பேனாவுக்கென உள்ள அதிகாரத்தை நீதிமன்றங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரால் பதிலளிக்க முடியவில்லை எனில், நீதிபதிக்கு உள்ள சந்தேகத்தை தனது பேனாமூலமாக எழுதி அதற்கு பதிலளிக்கஅரசு தரப்பு அல்லது அந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவகாசம் கொடுக்கலாம்’’ என அறிவுரை வழங்கியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்