இப்போதைக்கு நாட்டுக்கு அவசரத் தேவை ஆக்சிஜன் - ஸ்டெர்லைட் ஆலையை ஏன் தமிழக அரசே ஏற்று நடத்தக்கூடாது? : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி

By ஆர்.பாலசரவணக்குமார்

‘‘இப்போதைக்கு நாட்டுக்கு அவசரத் தேவை ஆக்சிஜன். அதை யார்தயாரித்துக் கொடுக்கிறார்கள் என்பது இப்போதைய பிரச்சினையல்ல. இந்த இக்கட்டான தருணத்தில் ஸ்டெர்லைட் ஆலையை ஏன்தமிழக அரசே ஏற்று நடத்தி ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொடுக்கக்கூடாது’’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா தொற்று நாடு முழுவதும் தீவிர வேகமெடுத்து வரும்நிலையில், ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்யும்விதமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்தால் ஆயிரம் டன் ஆக்சிஜனை உற்பத்திசெய்து இலவசமாக வழங்கத் தயாராக இருப்பதாக வேதாந்தா நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ‘‘ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளிக்கப்படும்’’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ‘‘ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை. அதன் காரணமாகவே அந்த ஆலை மூடப்பட்டது. ஏற்கெனவே இந்த ஆலையை மூட நடந்த மக்கள் போராட்டம் கலவரமாகி துப்பாக்கிச்சூட்டில் முடிந்துள்ளது. அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறைநிலவுகிறது என்றால் அதை உற்பத்தி செய்யும் பிற நிறுவனங்களின்உற்பத்தித் திறனை அதிகரிக்க மத்திய அரசு கவனம் செலுத்தலாமே? அதைவிடுத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்துதான் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமா?’’ என கேட்டார்.

அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா குறுக்கிட்டு, ‘‘தற்போது நாடுமுழுவதும் ஆக்சிஜன் அவசரத் தேவையாக உள்ளது. ஒன்று ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரித்து கொடுக்கட்டும். அல்லது தமிழக அரசே அந்த ஆலையை ஏற்று நடத்தி ஆக்சிஜன் தயாரிக்கட்டும். மொத்தத்தில் எங்களுக்கு தேவை ஆக்சிஜன்’’ என்றார்.

ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கொலின்கான்சால்வேஸ், ‘‘ஸ்டெர்லைட் ஆலை கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதில் அப்பகுதி மக்கள் தீர்க்கமாக உள்ளனர்’’என்றார்.

தலைமை நீதிபதி குறுக்கிட்டு, ‘‘நாட்டுக்கு இப்போதைய அவசரத்தேவை ஆக்சிஜன். அதை யார் தயாரித்துக் கொடுக்கிறார்கள் என்பது இப்போதைய பிரச்சினையல்ல. வேதாந்தா நிறுவனம் தருகிறதா அல்லது ஏ அல்லது பி அல்லதுசி நிறுவனம் தயாரித்து கொடுக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. இந்த இக்கட்டானதருணத்தில் ஸ்டெர்லைட் ஆலையை ஏன் தமிழக அரசே ஏற்று நடத்தி ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொடுக்கக்கூடாது என்பதுதான் எங்களின் கேள்வி. தமிழக அரசு ஏற்று நடத்துவதில் எங்களுக்கும் ஆட்சேபம் இல்லை’’ என்றார்.

அதற்கு,தமிழக அரசின் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ‘‘இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். ஆலையை தமிழக அரசே திறந்தாலும் கூட சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட் ஆலை, வேதாந்தா நிறுவனத்துக்கு எதிரான மனநிலை இன்னும் மாறவில்லை. மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம்’’ என்றார்.

அப்போது தலைமை நீதிபதி, ‘‘ஆக்சிஜன் கிடைக்காமல் தினமும்பல உயிர்கள் பறிபோய் வருகின்றன. தற்போதைய சூழலில் ஆக்சிஜன் அத்தியாவசியத் தேவையாகி விட்டது. எந்த ஆலையாக இருந்தாலும் அதன் கட்டமைப்பை பயன்படுத்தி ஆக்சிஜன் தயாரித்து கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. வேதாந்தா நிறுவனத்துடன் பிரச்சினை எனக் கூறி ஆக்சிஜன் தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்க முடியாது. நீங்கள் (தமிழக அரசு) உங்கள்கடமையை செய்ய ஏன் மறுக்கிறீர்கள்? தற்போது ஆக்சிஜன் ஒட்டுமொத்த நாட்டின் தேவை. தமிழகத்தின் தேவைக்கு ஆக்சிஜன் இருப்பு அதிகமாக இருப்பதால் ஆக்சிஜன் தயாரிக்க மாட்டோம் என கூறுகிறீர்களா? இந்த வாதத்தை ஏற்க முடியாது’’ என்றார்.

அப்போது, ‘‘இதுதொடர்பாக விளக்கமாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்’’ என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள், வரும் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்