தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தந்தபகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தவும், விதிகளை மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தல்படி, தமிழ்நாடு பேரிடர், வருவாய் நிர்வாக ஆணையர் அளித்த பரிந்துரை அடிப்படையில், கரோனா பரவலைத் தடுக்க ஏற்கெனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்.30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ள இனங்களில் மட்டும் வெளிநாட்டில் இருந்து பயணிகள் இந்தியா வரலாம். அனைத்து பன்னாட்டு பயணிகள் தமிழகம் வருவதற்கான தடை நீடிக்கும்.
தொற்று அதிகம் பரவும் மாவட்டங்களில், தேவையான அளவு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். தீவிர சோதனை மூலம், புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளையும் அமைக்க வேண்டும்.
மத்திய அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில், மாவட்ட நிர்வாகங்கள் மிகுந்தகவனத்துடன் குறுகிய அளவில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைகளை அமைக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிடவேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள மட்டும் அனுமதிக்க வேண்டும். அங்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம், மருத்துவம் சார்ந்த அவசர பணிகள் தவிர, வேறு எதற்கும் பொதுமக்கள் வெளியில் செல்லவும், உள்ளே நுழையவும் அனுமதிக்கக் கூடாது.
வீடு வீடாக தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளும் குழுக்களை அமைக்க வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, 14 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொற்று உறுதியானவரின் தொடர்பில் இருந்தவர்களில் 80 சதவீதத்தினரை 3 நாட்களுக்குள் கண்டுபிடித்து பரிசோதிக்க வேண்டும். தொற்று உறுதியானவர்களை சிகிச்சை மையங்களிலோ, வீடுகளிலோ தனிமைப்படுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
முகக் கவசம் அணிதல், கைகளை தூய்மையாக வைத்திருத்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கரோனா பரவல்தடுப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை மாவட்ட நிர்வாகங்கள் கடுமையாக்க வேண்டும். பொதுஇடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளையும் கடுமையாக்க வேண்டும்.
சந்தைப் பகுதிகளில் கூட்டம் கூடுவதை ஒழுங்குபடுத்த மத்திய சுகாதாரத் துறை வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகங்கள் கடுமையாக அமல்படுத்த வேண்டும். தற்போதைய சூழலில், தொற்று பரவும் சங்கிலியை உடைக்கும் சக்தியாக தடுப்பூசி உள்ளது. எனவே முன்னுரிமை வழங்கப்பட்ட அனைவருக்கும் அவசர,அவசியம் கருதி தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும்.
சூழ்நிலை கருதி, மாவட்டம், துணை மாவட்டம், நகரம், வார்டுஎன்ற அளவில் உள்ளூர் கட்டுப்பாடுகளையும் விதிக்கலாம். சமூக இடைவெளியை உறுதி செய்ய முழு ஊரடங்கை அமல்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறுவோர் மீது குற்ற நடவடிக்கையும் எடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago