தமிழில் சிறந்த இலக்கியப் படைப்புக்காக 2020-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில்ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2020-ம் ஆண்டுக்கான விருதுபெறுவோர் பட்டியல் புதுடெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது.
தமிழ் மொழியில் எழுத்தாளர் இமையம் எழுதிய ‘செல்லாத பணம்’என்ற நாவலுக்கு விருது கிடைத் துள்ளது. 2018-ல் வெளியான இந்த நாவலை க்ரியா பதிப்பகம்வெளியிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இமையத்தின் இயற்பெயர் அண்ணாமலை. 1964-ல் பிறந்த இமையம், பள்ளி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்.’ இது 1994-ல் வெளியானது. தமிழ்இலக்கியத்தில் அதுவரை ஆவணப்படுத்தப்படாத புதிரை வண்ணார்களின் வாழ்க்கையைப் பேசிய அந்த நாவல், பின்னாளில் புதிரை வண்ணார்கள் நல வாரியம்அமைக்கப்பட முக்கிய காரணங்களுள் ஒன்றாக அமைந்தது. இதைத் தொடர்ந்து ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘எங் கதெ’, ‘செல்லாத பணம்’ போன்ற நாவல்களையும் அவர் எழுதினார்.
கடந்த ஆண்டு ‘வாழ்க! வாழ்க!’ என்ற குறுநாவல் வெளியானது. ‘மண் பாரம்’, ‘வீடியோ மாரியம்மன்’, ‘கொலைச்சேவல்’, ‘சாவு சோறு’, ‘நறுமணம்’, ‘நன்மாறன் கோட்டைக் கதை’ போன்றவை இமையத்தின் சிறுகதைத் தொகுப்புகளாகும்.
இமையத்தின் ‘பெத்தவன்’ நெடுங்கதையை இயக்குநர் மு. களஞ்சியம் ‘முந்திரிக்காடு’ என்ற தலைப்பில் படமாக இயக்கி வருகிறார். இமையம் தன் எழுத்துக்காக ‘அக்னி அக்ஷர விருது’, ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது’, ‘அமுதன் அடிகள் இலக்கிய விருது’, தமிழக அரசின் ‘தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது’, இந்து தமிழ் திசையின் ‘சமகாலச் சாதனையாளர் விருது’ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
சாகித்ய அகாடமியின் 2020-ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் 7 கவிதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 20 மொழிகளைச் சேர்ந்த படைப்புகள் இடம்பெற்றுள்ளன. கன்னட மொழிக்கான விருதுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.வீரப்ப மொய்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எழுதிய ‘பாகுபலி அகிம்சா திக்விஜயம்’ என்ற காவிய கவிதை நூலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது.
தேர்வு செய்யப்பட்ட சிறந்தபடைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலைமற்றும் செப்பு பட்டயம் அடங்கிய சாகித்ய விருது வழங்கப்படும். விருது வழங்கும் விழா பற்றிய தேதி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
இதேபோல் சாகித்ய அகாடமியின் 2020-ம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் கவிஞர் ஷக்தி எழுதிய ‘மர நாய்’ கவிதைத் தொகுப்புக்கு யுவபுரஸ்கார் விருதுவழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ‘தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது’, இந்து தமிழ் திசையின் ‘சமகாலச் சாதனையாளர் விருது’ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago