கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

குல்மார்க்கில் 2-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தபிரதமர் மோடி, இது ஜம்மு-காஷ்மீரை குளிர்கால விளையாட்டு கேந்திரமாக மாற்றுவதற்கான ஒருபடியாகும் என கூறினார்.

2-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டி காஷ்மீரின் குல்மார்க்கில் நேற்று தொடங்கியது. மார்ச் 2-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில்27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் வாரியங்களைச் சேர்ந்த 1,200 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இப்போட்டியை நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இது சர்வதேச குளிர்கால விளையாட்டு அரங்கில் இந்தியாவின் நிலையை அறிந்துகொள்வதற்கும், ஜம்மு மற்றும் காஷ்மீரை குளிர்கால விளையாட்டு கேந்திரமாக மாற்றுவதற்குமான ஒரு படியாகும். குளிர்கால விளையாட்டுகளில் இந்த ஆண்டு பங்கேற்பவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. நாட்டில் குளிர்கால விளையாட்டுக்கான ஆர்வம் அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது.

தற்சார்பு இந்தியாவின் தூதர்கள்

நீங்கள் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகளில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும்போது, நீங்கள் விளையாட்டின் ஒரு பகுதி மட்டுமல்ல, நீங்கள் தற்சார்பு இந்தியாவின் தூதர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் களத்தில் என்ன செய்கிறீர்கள் என்பதன் மூலம் இந்தியாவை உலகம் மதிப்பீடு செய்கிறது.

இவ்வாறு பிரதமர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்