ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப் பலன்கள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளைமுதல் (பிப்.25) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழக அரசுக்குச் சொந்தமான8 போக்குவரத்துக் கழகங்கள், பல்வேறு இயற்கைப் பேரிடர்கள்மட்டுமல்லாமல் கரோனா காலத்திலும் லாப நோக்கமில்லாமல் மக்களுக்கு பேருந்து சேவை வழங்கின.சேவைத் துறையாக செயல்படுவதால் தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்து வருகிறது. இதற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், தேவையான நிதியைஅரசு ஒதுக்குவதில்லை. தொழிலாளர்களின் சேமிப்புப் பணத்தைக் கொண்டு போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன. இதுவரை ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு தொழிலாளர்களின் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு பணி ஓய்வுகால பலன்கள் ஓய்வுபெறும் நாளில் வழங்கப்படுவதில்லை.
பணியில் உள்ள ஊழியர்களுக்கும் இதர துறை தொழிலாளர்களைவிட குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. போக்குவரத்துக் கழகங்களின் நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டு அரசு நிதி வழங்கக் கோரி போராடி வருகிறோம்.
இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு செப்.1-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ஒப்பந்தம் கிடப்பில் உள்ளது. தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தியும் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு முன்வரவில்லை.
தற்போது சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிந்து தேர்தல் அறிவிப்பு வர உள்ளது. தேர்தல்அறிவிப்புக்கு முன்பே பிரச்சினைகளைத் தீர்க்க வலியுறுத்தி கடந்த டிச.3-ம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பு வழங்கப்பட்டது.
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்குவது, மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது, ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது, ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது, போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தி, பாதுகாப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளைமுதல் (பிப்.25) வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை தொழிலாளர்கள் உணர்ந்துள்ளனர். இருப்பினும், வேறு வகையில் தீர்க்க இயலவில்லை. எனவே, தொழிலாளர்களின் நியாயங்களை உணர்ந்து எங்களது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள், பயணிகள் ஆதரவு தர வேண்டும் என்று தொழிற்சங்கக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டமைப்பில், தொமுச,சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசிஉள்ளிட்ட 9 சங்கங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago