தென் மாவட்டங்களில் அண்மையில் பெய்த கனமழையால் 657 பாசன ஏரிகள் நிரம்பியுள்ளன. ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 923 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.
தமிழகத்தில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய வடகிழக்குப் பருவமழை ஜனவரியிலும்நீடித்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 10 நாட்களுக்கும் மேலாக மழை கொட்டியது. இதனால் அம்மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம், அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் நீலகிரி மாவட்டம் தவிர 37 மாவட்டங்களில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 14 ஆயிரத்து 139 பாசன ஏரிகள் உள்ளன. இவற்றில் 4 ஆயிரத்து 923 பாசன ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 564 ஏரிகளில் 530 ஏரிகளும், காஞ்சிபுரத்தில் 381 ஏரிகளில் 327-ம், தஞ்சாவூரில் 640 ஏரிகளில் 519-ம், திருநெல்வேலியில் 781 ஏரிகளில் 212-ம், தென்காசியில் 543 ஏரிகளில் 263-ம், விழுப்புரத்தில் 517 ஏரிகளில் 377-ம், விருதுநகரில் 342 ஏரிகளில் 104-ம், திருவள்ளூரில் 578 ஏரிகளில் 377-ம், தூத்துக்குடியில் 228-ல் 76-ம், திருவண்ணாமலையில் 697 ஏரிகளில் 294 ஏரிகளும் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.
அதேநேரம், அதிக பாசன ஏரிகள் உள்ள மாவட்டங்களில் குறைவான எண்ணிக்கையிலேயே ஏரிகள் நிரம்பியுள்ளன. அதன்படி கன்னியாகுமரியில் 2,040 ஏரிகளில் 310-ம், மதுரையில் 1,340 ஏரிகளில் 462-ம், புதுக்கோட்டையில் 1,131 ஏரிகளில் 198-ம், சிவகங்கையில் 1,460 ஏரிகளில் 44-ம் நிரம்பியுள்ளன.
தமிழகத்தில் 683 ஏரிகளில் 91 சதவீதம் முதல் 99 சதவீதமும், 729 ஏரிகளில் 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது. 1,272 ஏரிகளில் 71 முதல் 80 சதவீதமும், 1,463 ஏரிகளில் 51 முதல் 70 சதவீதமும், 2,348 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 2,295 ஏரிகளில் 1 முதல் 25 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது. 426 ஏரிகளில் நீர் இருப்பு இல்லை.
இவ்வாறு அதிகாரிகள் தெரி வித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago