தியாகிகள் பென்ஷன் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு வழங்காததை எதிர்த்து, 101 வயது சுதந்திர போராட்ட வீரர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், சவுலுப்பட்டியைச் சேர்ந்த 101 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் வடிவேலு, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றவர். அப்போது, அவர் கைதாகி கர்நாடகா மாநிலம் பெல்லாரி அள்ளிபுரம் சிறையில் 7 மாதம் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரருக்கான பென்ஷன் கேட்டு மத்திய அரசிடம் 1985-ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் தாமதமாக விண்ணப்பித்துள்ளதாகக் கூறி, மத்திய உள்துறை துணை செயலாளர் அந்த விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். அதன்பின்கடந்த 1996-ம் ஆண்டு தமிழக அரசிடம் சுதந்திரப் போராட்ட வீரருக்கான பென்ஷனுக்கு விண்ணப்பித்த நிலையில், உயர் நீதிமன்றஉத்தரவுப்படி 2001-ம் ஆண்டு முதல்பென்ஷன் வாங்கி வருகிறார்.
இந்நிலையில் மத்திய அரசு தனக்கு பென்ஷன் வழங்க மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வடிவேலு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வடிவேலுவின் கோரிக்கையை 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடிக்க வேண்டும் என்று கடந்த 2020 மார்ச் மாதம் உத்தரவிட்டது.
ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வடிவேலு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘தனக்கு மத்திய அரசின் பென்ஷன் வழங்க மறுத்த மத்திய உள்துறை செயலர் அஜய்குமார் பல்லா, துணைச் செயலர் ரீனா மிர்ரா, தமிழக அரசின் தலைமைச் செயலர் க.சண்முகம், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.கோவிந்தராஜ், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுஅதிகாரிகள் ஜன.29-க்குள் பதில்அளிக்க உத்தரவிட்டு வழக்கைதள்ளிவைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago