கரோனா பரவல் காரணமாக இந்திய ரயில்வேக்கு 2020-ல்சுமார் ரூ.39 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுகட்டி, வருவாயை பெருக்குவதற்கு சரக்கு ரயில் போக்குவரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது.
இந்திய ரயில்வேயில் இயக்கப்படும் 13,349 ரயில்களில் தினமும்2.30 கோடி பேர் பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில், கரோனா பரவலை தடுக்கும் விதமாக, பயணிகள் ரயில் சேவை பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு, பல்வேறு முக்கிய வழித்தடங்களில் 400-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக மும்பை, சென்னை, கொல்கத்தாவில் பெரும்பாலான மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், பயணிகளுக்கான முழுமையான ரயில் சேவை இன்னும் தொடங்கவில்லை. மற்றொருபுறம் கரோனா அச்சத்தாலும், ரயில் பயணங்களை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால், ரயில்வேக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ரயில்வே துறை புள்ளிவிவரத்தின்படி, கடந்த 2019-ம் ஆண்டில் மொத்தம் ரூ.1.27 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் பயணிகள் பிரிவில் மட்டும் ரூ.38 ஆயிரம் கோடி கிடைத்தது. ஆனால், கடந்த 2020-ம் ஆண்டில் ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ.88,250 கோடி. முந்தைய ஆண்டைவிட சுமார் ரூ.39 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது 31 சதவீத வருவாய் இழப்பாகும். குறிப்பாக, பயணிகள் பிரிவில் ரூ.6,033 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட சுமார் 84 சதவீத வருவாய் இழப்பாகும்.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
மாதக் கணக்கில் ரயில் சேவைநிறுத்தப்பட்டிருப்பது ரயில்வே துறையின் 167 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறை.
கரோனாவுக்கு முன்பு பயணியர் ரயில்கள் மூலமாக மட்டுமேஒரு நாளுக்கு ரூ.145 கோடி வருவாய் கிடைக்கும். இதுதவிர, சரக்கு ரயில்கள், தனியார் நிறுவனங்களின் பார்சல், நடைமேடை கட்டணம் என பல்வேறு வகைகளில் ரயில்வேக்கு ஒரு நாளுக்கு மொத்தமாக சுமார் ரூ.400 கோடி வரை வருவாய் கிடைக்கும். 2020-ல் கரோனா பரவலால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரயில்வே வாரிய உத்தரவின்படி, சரக்கு போக்குவரத்து வசதியை அதிகரித்து, மேம்படுத்தும் வகையில் வர்த்தக மேம்பாட்டு குழு உருவாக்கப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சரக்குகள் கையாள்வதை அதிகரிப்பது, தேவையான வழித்தடங்களுக்கு பிரத்யேக சரக்கு ரயில்கள் இயக்குவது, துறைமுகங்களை இணைக்கும் வகையில் ரயில்பாதை கட்டமைப்பை மேம்படுத்துவது, விரைவு ரயில்களில் தேவையான அளவுக்கு பார்சல் பெட்டிகளை இணைப்பது, நீண்டகால வாடிக்கையாளர்கள், நிறுவனங்களை ஊக்குவிக்க கட்டண சலுகைகள், குறிப்பிட்ட பொருட்களுக்கு கட்டண தள்ளுபடி அளிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம், ரயில்வேக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக சரக்கு ரயில் பிரிவில் வருவாயை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விரைவில் மீண்டு வரும்
டிஆர்இயூ துணை பொதுச் செயலாளர் மனோகரன் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பெரும்பாலான துறைகள் தற்போதுதான் மெல்ல, மெல்ல மீண்டும் பழைய நிலைக்கு வருகின்றன. வரும் மாதங்களில் கூடுதல் வருவாய் வர வாய்ப்பு இருப்பதால் இழப்பு சதவீதம் மேலும் குறையும். வழக்கமாகவே பயணிகள் பிரிவு நஷ்டத்தை, சரக்கு பிரிவு லாபத்தால் ரயில்வே ஈடுசெய்கிறது. நிர்வாகச் செலவு என்பது சிறிய அளவே குறையும் என்றாலும், பயணியர் ரயில்கள் இயங்காததால் 12 லட்சம் கிலோ லிட்டர் டீசல் உபயோகம், 80 லட்சம் கி.வாட் மின்சார எரிபொருள் செலவு மிச்சமாகும். சிக்கன நடவடிக்கைகளை ரயில்வே தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பணச் சுழற்சி முடக்கம் இருப்பினும், ரயில்வே நிதிநிலை அபாயகரமானதாக இல்லை. பயணிகள் பிரிவு வருவாய் இழப்பு தற்காலிக பின்னடைவுதான். ரயில்வே துறை விரைவில் மீண்டு வரும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago