காவிரி ஆற்றின் பாசன உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், காவிரி உப வடிநிலத்தை சீரமைக்க ரூ.224 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பொதுப்பணித் துறை செயலர் கே.மணிவாசன் வெளியிட்ட அரசாணை:
தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் புனரமைப்பு கழகம், நபார்டு கட்டமைப்பு மேம்பாட்டு உதவி அமைப்பிடம் (என்ஐடிஏ) இருந்து ரூ.3,384 கோடியை, காவிரி உப வடிநில விரிவாக்கப் பணிகள், புனரமைத்தல், நவீனப்படுத்துதல் திட்டத்துக்காக பெற்றுக் கொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இப்பணிகளுக்கான 90% தொகையைநபார்டும், 10% தொகையை மாநில அரசும் அளிக்கும்.
இதன்கீழ், காவிரி உப வடிநிலத்தை மேம்படுத்த 23 தொகுப்புகளாக திட்டம் தயாரிக்கப்பட்டு நபார்டுக்கு அனுப்பப்பட்டது. அதன்பின், 33 தொகுப்புகளாக திட்டப்பணிகள் தயாரிக்கப்பட்டன. இதில், விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் இரண்டு தொகுப்பு பணிகளுக்காக ரூ.243 கோடியே 40 லட்சத்துக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கும்படி அரசுக்கு தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் புனரமைப்பு கழகத்தின் மேலாண் இயக்குநர் பரிந்துரைத்தார்.
இதை பரிசீலித்த தமிழக அரசு, முதல் தொகுப்பில் தஞ்சை மாவட்டம் புதலூர் தாலுகாவில் உள்ளகாவிரி உப வடிநில பகுதியில்காவிரி நதிநீர் பாசன கட்டமைப்பை விரிவாக்கம் செய்தல்,புனரமைத்தல், நவீனப்படுத்துதல் பணிகளுக்காக ரூ.122 கோடியே 60 லட்சம் மற்றும் புதலூர் மற்றும் திருவையாறு தாலுகாக்களில் இதே பணிகளுக்காக ரூ.102 கோடியே 20 லட்சம் என ரூ.224 கோடியே 80 லட்சத்தை ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதுதவிர, திட்டம் தொடர்பான 33தொகுப்புகளுக்கும் தமிழக அரசுஅனுமதியை வழங்கியுள்ளது.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago