தமிழகத்தில் 2-ம் கட்டமாக 37 அணைகளை சீரமைக்க ரூ.610 கோடி ஒதுக்கீடு: ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு

By டி.செல்வகுமார்

தமிழகத்தில் 2-ம் கட்டமாக ரூ.610 கோடியில் 37 அணைகளை சீரமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ளன.

நாடு முழுவதும் உள்ள அணைகள், நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களை சீரமைப்பதற்காக உலக வங்கி, ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் நிதியுதவியுடன், அணை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் மத்திய அரசு அனுமதி வழங்கி வருகிறது.

தமிழகத்தில் நீர்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் மேட்டூர், பவானிசாகர், மணிமுத்தாறு, பாபநாசம், வைகை உள்ளிட்ட 89 அணைகளும், தமிழ்நாடு மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் மின் உற்பத்திக்காக 38 அணைகளும் உள்ளன. இதில், முதல்கட்ட அணை சீரமைப்புப் பணிகள் 2015-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 2, 3-ம் கட்ட பணிகளை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இதன்படி, நாடு முழுவதும் 736 அணைகளின் பாதுகாப்பு, மேம்பாட்டு திட்டத்துக்காக ரூ.10,211 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் முதல்கட்ட அணை சீரமைப்புப் பணிகள் ரூ.749 கோடியில் நடந்து வருகின்றன. அணைகளின் கரையை பலப்படுத்துவது, மதகுகள் சீரமைப்பது, சேதமடைந்த மதகுகளை மாற்றுவது, நீர்வழிந்தோடும் பகுதிக்கு மேல் ‘டெக் பிரிட்ஜ்’ கட்டுவது, இணைப்பு சாலையை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

69 அணைகளில் 2015-ல் தொடங்கப்பட்ட சீரமைப்பு பணிமுடியும் நிலையில் உள்ளது. இப்பணிகளை 2018-ல் முடிக்க திட்டமிடப்பட்டது. மழை, வெள்ளம், கரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வரும் டிசம்பருக்குள் இப்பணிகள் முடிவடையும்.

2-ம் கட்ட அணைகள் சீரமைப்புபணிக்கு ரூ.610 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், முதல்கட்ட சீரமைப்பில் விடுபட்ட சில பணிகளையும் சேர்த்து 37 அணைகள் சீரமைக்கப்பட உள்ளன.

முதல்கட்ட பணி முடிந்து, அடுத்த ஓரிரு மாதங்களில் 2-ம் கட்ட அணைகள் சீரமைப்பு, மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்