காணொலியில் காவிரி ஆணையக் கூட்டம்: தமிழகத்துக்கான நீர் திறப்பு குறித்து ஆலோசனை; இதுவரை 16 டிஎம்சி கூடுதலாக திறப்பு

By செய்திப்பிரிவு

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் காணொலியில் நடந்தது.கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் இதுவரை 16 டிஎம்சி கூடுதலாக திறக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக நீர்திறப்பது குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 10-வது கூட்டம் காணொலி மூலமாக நேற்று நடைபெற்றது. டெல்லியில் ஆணையத் தலைவர்ராஜேந்திர குமார் ஜெயின் பங்கேற்றார். ஆணைய உறுப்பினர் நவீன்குமார், மத்திய ஜல்சக்தி துறை செயலாளர் நீரஜ்குமார் ஆகியோரும் பங்கேற்றனர். தமிழகம் சார்பில்சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணி துறை செயலர்கே.மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன், துணைத் தலைவர் கே.எஸ்.ராம்குமார் பங்கேற்றனர்.

கர்நாடக நீர்வளத் துறை செயலாளர் ராகேஷ் சிங், கேரள நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளர் டி.கே.ஜோஸ், புதுச்சேரி தலைமை பொறியாளர் அன்பரசு மற்றும் மத்திய அரசின் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பொதுவான நீர் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. கர்நாடகா இதுவரை வழங்கியுள்ள நீ்ர் அளவு, இன்னும் வழங்காமல் நிலுவையில் உள்ள நீர் அளவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை

கடந்த மாதம் நடைபெற்ற 9-வதுகூட்டத்தில், செப்டம்பருக்கான நிலுவை 10 டிஎம்சி, அக்டோபருக்கான 25 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்று தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடக அணைகள் நிரம்பி,உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டது. இதனால், தமிழகத்துக்கு போதுமான நீர் வந்து சேர்ந்தது.

அந்த வகையில், அக்.27-ம்தேதி வரை தமிழகத்துக்கு 140.750டிஎம்சி தரவேண்டிய நிலையில், 156.771 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் மட்டும் 20.220 டிஎம்சி திறக்கப்பட வேண்டிய நிலையில், 36.552 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக விவாதித்த அதிகாரிகள், அடுத்த கட்டமாக நவம்பருக்கு 13.780 டிஎம்சி, டிசம்பருக்கு 7.350 டிஎம்சி தண்ணீரை வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வரவேண்டிய நீரும் எந்த சிக்கலும் இன்றி தமிழகத்துக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேகேதாட்டு அணை விவகாரத்தை கடந்த கூட்டத்தில் கொண்டுவந்த கர்நாடக அரசு, இந்த கூட்டத்தில் அதை விவாத பட்டியலில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்