இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலக அளவில் ஆண்டுதோறும் பிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ்) போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் 70-வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி இஸ்ரேல் நாட்டில் உள்ள சுற்றுலா தலைநகரமான எய்லாட் நகரில் நடைபெற்றது.
உலகம் முழுவதிலும் இருந்து 80 நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் பஞ்சாபை சேர்ந்த 21 வயது ஹர்னாஸ் கவுர் சாந்து பங்கேற்றார். கடந்த ஒரு மாதமாக பல்வேறு சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டு அழகிகள் இறுதிச்சுற்றுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அந்த தொடக்கச் சுற்று போட்டிகளில் இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் சாந்து தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். இதனால் முதல் 10 அழகிகள் வரிசையில் ஒருவராக ஹர்னாஸ் சாந்து தேர்வானார். இந்நிலையில் இந்த 10 நாட்டு அழகிகளுக்கு இடையேஇந்திய நேரப்படி நேற்று அதிகாலை இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன.
இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து, பராகுவே நாட்டை சேர்ந்த 22 வயது இளம் பெண் நடியா பெரிரியா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 24 வயது பெண் லலிலா ஸ்வானே ஆகிய மூன்று பேரும் இறுதிச்சுற்றுக்கு தேர்வாயினர்.
இறுதிச்சுற்றில் பிரபஞ்ச அழகியை தேர்வு செய்வதற்கான கடைசி நிகழ்ச்சியாக கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இறுதிச் சுற்றில் தேர்வான மற்ற 2 பேரைக் காட்டிலும் ஹர்னாஸ் சாந்து அளித்த பதில் அனைவரையும் கவர்ந்தது. இதையடுத்து பிரபஞ்ச அழகியாக ஹர்னாஸ் சாந்து தேர்வு செய்யப்பட்டார். 2-வது இடம் நடியாவுக்கும், மூன்றாவது இடம் லலிலா ஸ்வானேவுக்கும் கிடைத்தது.
பிரபஞ்ச அழகி பட்டம் வென்றஹர்னாஸ் சாந்துக்கு கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற மெக்சிகோ நாட்டு அழகி ஆண்ட்ரியா கிரீடம் சூடி வாழ்த்தினார்.
பிரபஞ்ச அழகி பட்டத்தை இதுவரை இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் மட்டும் பெற்றுள்ளனர். 1994-ம் ஆண்டு சுஷ்மிதா சென்னும், 2000-ம் ஆண்டில் லாரா தத்தாவும் இந்தப் படத்தை வென்றிருந்தனர்.
அவர்களை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 3-வது பெண்ணாக ஹர்னாஸ் சாந்து இந்த பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் தற்போது அங்குள்ள கல்லூரியில் பொது நிர்வாகப் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். 2017-ம் ஆண்டு முதல் அழகி போட்டிகளில் ஹர்னாஸ் கவுர் பங்கேற்று வருகிறார். 17 வயதில் அவர் முதல்முறையாக அழகி பட்டத்தை கைப்பற்றினார்.
2019-ம் ஆண்டு பஞ்சாப் மாநில அழகியாக தேர்வான அவர் கடந்த ஆண்டு மிஸ் இந்தியா அழகியாக தேர்வாகி பிரபஞ்ச அழகி போட்டிக்குள் நுழைந்தார்.
மாடலிங் செய்து வரும் இவர் சில பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago