இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 425 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
பிரிஸ்பனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தில் 84 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 112, மிட்செல் ஸ்டார்க் 10 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். மிட்செல் ஸ்டார்க் 35, நேதன் லயன் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். மட்டையை சுழற்றிய டிராவிஸ் ஹெட் 148 பந்துகளில், 14 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 152 ரன்கள் விளாசிய நிலையில் மார்க் வுட் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுக்க ஆஸ்திரேலிய அணி 104.3 ஓவர்களில் 425 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் ஆலி ராபின்சன், மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் கிறிஸ்வோக்ஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 278 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 70 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. ஹசீப் ஹமீது 27, ரோரி பர்ன்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். டேவிட் மலான் 177 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 80 ரன்களும், கேப்டன் ஜோ ரூட் 158 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 86 ரன்ககளும் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
61 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் டேவிட் மலானுடன் இணைந்து ஜோ ரூட் ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்துள்ளது. கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 58 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது இங்கிலாந்து அணி.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago