2023-ம் ஆண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி

By செய்திப்பிரிவு

“மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் வரும் 2023-ம் ஆண்டில் செயல்படுத்தப்படும்” என்று நாடாளுமன்றத்தில் மத்திய விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் நேற்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதில்:

கரோனா பரவல் காரணமாக ககன்யான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக, அடுத்த ஆண்டு பிற்பகுதியில் ககன்யான் -1 திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்படும். அதன் பிறகு, 2022-ம் ஆண்டு இறுதியில் ககன்யான் -2 திட்டத்தின் கீழ் வியோமி் மித்ரா என்ற பெண் ரோபோ விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் கனவுத் திட்டமான ககன்யான் -3 திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பி வைக்கப்படுவர். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் விண்வெளித் துறையில் தன்னிகரற்று விளங்கும் எலைட் நாடுகளின் (அமெரிக்கா, சீனா, ரஷ்யா) பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும்.

ககன்யான் திட்டத்திற்காக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான மையம் பெங்களூருவில் நிறுவப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விண்வெளி வீரர்களுக்கான அடிப்படை பயிற்சிகளும் வழங்கப்பட்டு விட்டன.

இதேபோல, நிலவுக்கு விண்கலம் அனுப்பும் சந்திராயன்- 3 திட்டத்தை 2022-23-ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்குள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் விண்வெளி நிலையம்

இந்த திட்டங்களின் நீட்சியாக, இந்தியாவின் முதல் விண்வெளி நிலையம் 2030-ம் ஆண்டுக்குள் நிறுவப்படும். இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்