புதுப்பிக்கப்பட்ட - காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் 13-ம் தேதி பிரதமர் திறக்கிறார் :

By செய்திப்பிரிவு

புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி 13-ம் தேதி திறந்து வைக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாக இந்தக் கோயிலின் வளாகம் 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கங்கை நதிக்கரையில் இருந்து கோயிலை இணைக்கும் வகையில் லலிதா படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோயில் வரை 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் மையம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் மோடி 13-ம் தேதி தொடங்கி வைக்கிறார். காலபைரவர் கோயிலில் இருந்து விஸ்வநாதர் கோயிலுக்கு நடந்து வந்து கோயில் வளாகத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொள்கின்றனர். ஏராளமான துறவிகள், மடாதிபதிகள், இந்துமதத் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சியை மக்கள் காண்பதற்கு வசதியாக நாடு முழுவதும் 51,000 இடங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதற்காக 3 நாள் பயணமாக 13-ம் தேதி வரும் மோடி, வாரணாசியில் நடக்கும் பாஜக முதல்வர்கள் மாநாடு மற்றும் மேயர்கள் மாநாட்டிலும் கலந்து கொள்கிறார்.

பாஜக பொதுச் செயலாளர் தருண் சக் கூறுகையில், ‘‘250 ஆண்டுகளுக்குப் பின் காசி விஸ்வநாதர் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாக நடத்தும் வகையில் வரும் 13-ம் தேதி முதல் ஜனவரி 14-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டா திட்டமிட்டுள்ளார்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்