கரோனா தொடர்பான கட்டுபாடுகள் காரணமாக இந்திய விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் 2020-21-ம் நிதி ஆண்டில் ரூ.20,000 கோடிக்கு மேல் இழப்பைச் சந்தித்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த மார்ச் 24-ல் மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை நடைமுறைப்படுத்தியது. அதற்கு மறுநாள் முதல் உள்நாட்டு விமானங்கள் சேவை முடக்கப்பட்டது. அதன் பிறகு மே மாதத்தில் 33 சதவீத இருக்கைகளுடன் விமானங்களை இயக்க அனுமதிக்கப்பட்டது. அந்தக் கட்டுப்பாடு அக்டோபர் மாதம் வரையில் நீடித்தது.
இதன் காரணமக இந்திய விமானத் துறை கடும் இழப்பசைச் சந்தித்தது.
இந்நிலையில் விமானத் துறையின் நிதி நிலைமை தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய விமானத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் ‘கரோனா காலத்தில் இந்திய விமானத்துறை மிகுந்த பாதிப்பைச் சந்தித்தது. விமான நிறுவனங்கள் ரூ.19,564 கோடி அளவிலும் விமானநிலையங்கள் ரூ.5,116 கோடி அளவிலும் இழப்பைச் சந்தித்துள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
விமானத்துறையை புதுப்பிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்று கேட்கப்பட்டதற்கு, ‘இந்திய விமான நிலைய ஆணையம் விமான நிலையங்களின் மேம்பாட்டுக்கும் விரிவாக்கத்துக்கும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.25,000 கோடி செலவிட உள்ளது. பராமரிப்புப் பணிகளுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago