ஆசிய, பசிபிக் பிராந்திய நாடுகள் ஒமைக்ரான் வைரஸை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குநர் டகாசி கசாய், மணிலாவில் நேற்று காணொலி வாயிலாக நிருபர்களிடம் கூறியதாவது:
ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் எல்லைகளை மூடி வருகின்றன. இதன்மூலம் அந்த நாடுகளுக்கு வைரஸ் பரவுவது தாமதம் ஆகலாம். அனைத்து நாடுகளும், குறிப்பாக ஆசிய-பசிபிக் நாடுகள் புதிய வகை கரோனா வைரஸை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இந்த வைரஸ் பாதிப்பு எந்த அளவில் உள்ளது, கரோனா தடுப்பூசி போட்டவர்களையும் வைரஸ் தொற்றுகிறதா என்பது குறித்து முழுமையான விவரங்கள் தெரியவில்லை. எனினும் இப்போதைய நிலையில் டெல்டா உள்ளிட்ட இதர வகை கரோனா வைரஸ்களைவிட, ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாகப் பரவுகிறது.
டெல்டா வைரஸ் தடுப்பு பணியில் உலக நாடுகள் பெற்ற அனுபவம், படிப்பினையை கொண்டு ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். தடுப்பூசி போடும் பணியை உலக நாடுகள் தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு டகாசி கசாய் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago