கரோனா ஊரடங்கு காரணமாக 2020-ம் நிதி யாண்டின் முதல் காலாண்டில் அமைப்புசார் துறைகளில் வேலைவாய்ப்பு 7.5 சதவீதம் சரிந்துள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மார்ச் இறுதி வாரத்தில் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. இதனால், பல கோடி மக்கள் வேலையிழந்தனர்.
இந்நிலையில், ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட வேலையிழப்பு தொடர்பாக மக்களவையில் பாஜக உறுப்பினர் பிரிஜேந்திர சிங் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, திங்கள்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், 2020-2021 நிதி ஆண்டின் முதல் காலண்டின் வேலைவாய்ப்பு தொடர்பான அறிக்கையைக் குறிப்பிட்டுக் காட்டியது.
உற்பத்தி, கட்டுமானம், போக்குவரத்து உள்ளிட்ட 9 துறைகளில் வேலைவாய்ப்புப் பெற்றிருந்த இருந்த ஆண்களின் எண்ணிக்கை, சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2.1 கோடியிலிருந்து 2 கோடியாகவும், பெண்களின் எண்ணிக்கை 90 லட்சத்திலிருந்து 83 லட்சமாகவும் குறைந்துள்ளது என்று மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட வேலையிழப்பு தொடர்பான தகவல் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையானது அமைப்புசார் வேலைகளை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. இந்தியாவில் வெறும் 6.5 சதவீதம் மக்கள் மட்டுமே அமைப்புசார் வேலைகளில் உள்ளனர். 80 சதவீதத்துக்கு மேலான மக்கள் அமைப்புசாரா துறைகளிலே வேலைவாய்ப்பு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago