அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது - இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை : நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

By செய்திப்பிரிவு

நாட்டில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

உருமாறிய புதிய வகை கரோனாவைரஸ் (பி.1.1.529) தென்னாப்பிரிக் காவில் அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டது. இதற்கு ஒமைக்ரான் என உலகசுகாதார அமைப்பு பெயர் சூட்டியது. மேலும் இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது, கடும் விளைவுகளை ஏற்படுத்துக் கூடியது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உலக நாடு கள் கவலை அடைந்துள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

நாட்டில் இதுவரை ஒமைக்ரான்வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட வில்லை. இந்த வைரஸ் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் அடிப்படையில் மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான நோயாளிகளிடம் நாங்கள் உடனடியாக வைரஸ் மரபணு பகுப்பாய்வு நடத்துகிறோம். கரோனா நெருக்கடியின்போது நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். இப்போது நம்மிடம் நிறைய வசதிகளும் ஆய்வகங்களும் உள்ளன. எந்தொரு சூழ்நிலையையும் நம்மால் சமாளிக்க முடியும். ஒமைக்ரான் வைரஸ் நாட்டுக்குள் நுழைவதை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.

மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் நேற்று முன்தினம் கூறும்போது, “இந்தியாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ்களை விட வேகமாகப் பரவக்கூடியதாக அஞ்சப்படும் ஒமைக்ரான் வைரஸ் நாட்டில் இதுவரை கண்டறியப்படவில்லை. என்றாலும் சமீபத்தில் இந்தியா வந்த சர்வதேச பயணிகளின் மரபணு பகுப்பாய்வு முடிவுகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தனர். இந்நிலையில் அமைச்சர் மாண்டவியா இவ்வாறு கூறியுள்ளார்.

இதனிடையே மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 31 வரை தொடரும். நாட்டில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் முதல்டோஸ் போடுவதை இது நோக்கமாகக் கொண்டது. மேலும் இரண்டாவது டோஸ் வழங்குவதில் உள்ள பின்னடைவை நிறைவு செய்கிறது.

நாட்டில் கரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்படுகிறது. புதிய வகைகரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு விதிமுறைகளைமக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களுடன் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ்பூஷண் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் “சர்வதேச பயணிகளுக்கான கரோனா பரிசோதனையை மேம்படுத்த வேண்டும். சோதனை உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். சர்வதேச பயணிகளின் தொடர்புகளை கண்டறிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்