நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நமது நாடு தற்போது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் நடைபெறும் தற்போதைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் மிகவும் முக்கியமானது. இக்கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும். நாடாளுமன்ற அவைகளின் மாண்பையும் சபாநாயகரின் மாண்பையும் மதித்து அனைத்து உறுப்பினர்களும் நடக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் அவர்கள் நடந்துகொள்ளக் கூடாது. நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. மேலும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் திறந்த மனத்துடன் பதில் தர அரசு தயாராக இருக்கிறது.
கண்ணியத்தை குறைக்கக் கூடாது
நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை தள்ளிவைப்பது, இடையூறு செய்வது உள்ளிட்ட வற்றால் நேரத்தை நாம் வீணடிக்கக் கூடாது. நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் அர்த்த முள்ளதாக அமைய வேண்டும்.நாடாளுமன்றத்தில் அரசு நடவடிக்கைகள் குறித்தும், கொள்கைகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பலாம். ஆனால் அதேநேரத்தில் அவையின் கண்ணியத்தை அவர்கள் குறைக்கக்கூடாது. உலகம் முழுவதும் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. ஒமைக்ரான் கரோனா வைரஸ் குறித்து நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago