பிட்காயினை கரன்சிக்கு நிகராக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை : மக்களவையில் நிதியமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

பிட்காயினை கரன்சிக்கு நிகரானதாக அங்கீகரிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.

கிரிப்டோ கரன்சி குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று எழுத்துபூர்வ பதிலளித்தார். அதில், "கிரிப்டோகரன்சியை முறைப்படுத்துவது குறித்த சட்ட மசோதா நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட உள்ளது. கிரிப்டோ கரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி முறைப்படுத்தல் 2021 மசோதா, மெய்நிகர் கரன்சி எனப்படும் டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனையை முறைப்படுத்துவதற்கானதாகும். இதற்கான வரையறையை இந்திய ரிசர்வ் வங்கிவகுத்துள்ளது. பிட்காயினை கரன்சிக்கு நிகரானதாக அங்கீகரிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.

அனைத்து கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையை தடை செய்யும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படஉள்ளதாக மக்களவை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் உள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அவற்றில் சிலவற்றை நிபந்தனைகளுடன் அனுமதிக்கவும் மசோதா வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போது கிரிப்டோ கரன்சியைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்